பார்வையற்ற முதியவருக்கு உதவிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!
- IndiaGlitz, [Saturday,July 18 2020]
கேரளாவில் பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிட பெண் ஒருவர் அங்குமிங்கும் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது குறித்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவருக்கு அவர் வேலை செய்யும் நிறுவனம் அவருக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக நடுத்தர வயது பெண் ஒருவர், ஓடிச்சென்று பேருந்து நடத்துநரிடம் பார்வையற்ற முதியவர் ஒருவர் வந்து கொண்டிருப்பதாகவும், தயவுசெய்து பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறினார். அதன்பின் அந்த பெண் முதியவரிடத்தில் ஓடிச் சென்று அவருடைய கையைப் பிடித்து வந்து பேருந்தில் ஏற்றி விடுகிறார்.
இந்த சம்பவத்தை அங்கேயிருந்த ஒரு வாலிபர் மொட்டை மாடியில் இருந்து வீடீயோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து ஒரே நாளில் அந்த பெண் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இந்த நிலையில் முதியவருக்கு உதவி செய்த அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா என்பதும், அவர் ஒரு நகைக்கடையில் வேலை செய்கிறார் என்பதும் பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோதுதான் அவர் அந்த பார்வையற்ற முதியவருக்கு உதவி செய்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் பார்வையற்ற முதியவருக்காக பேருந்தை நிறுத்தி உதவி செய்த பெண்ணுக்கு அவர் பணியாற்றும் நகைக்கடை அதிபர் வீடு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து சுப்ரியா கூறியபோது, ‘நான் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். ஒரு சாதாரண உதவிக்கு என்னுடைய முதலாளி எனக்கு சொந்தமாக ஒரு வீடு கொடுத்துள்ளார். அதைவிட நான் செய்த உதவிக்கு என்னுடன் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தெரிவித்த வாழ்த்துகள் என் கண்ணில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது என்று கூறியுள்ளார்.