டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!
- IndiaGlitz, [Wednesday,February 10 2021]
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சென்டரில் படித்த பெரும்பாலான மாணவர்கள் மாரஞ்ச்சேரி பகுதியில் உள்ள பொன்னானி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரே இடத்தில் டியூசன் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பயிலும் பள்ளியிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பரிசோதனையில் இதுவரை 190 மாணவர்கள் மற்றும் 79 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தனியார் டியூசன் சென்டர் வழியாகத்தான் கொரோனா பாதிப்பு மற்றவர்களுக்கு பரவி இருக்கிறது என்ற தகவலையும் அம்மாநிலச் சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதனால் டியூசன் சென்டர் அமைந்து இருக்கும் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. கேரளாவில் ஒரே நேரத்தில் இத்தனை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தற்போது அம்மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டு இருக்கிறது.