சாலையில் மட்டுமல்ல இனிமேல் கேரளாவில் தண்ணீரிலும் டாக்சி ஓடும்… விறுவிறுப்பான தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,September 17 2020]
கேரள மாநிலத்தில் நீர் நிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரத்தில் நீர் நிலைகளை ஒட்டிய சுற்றுலாத் தளங்களும் அங்கு அதிகம். இந்நிலையில் கொரோனா விதிமுறைகளினால் போக்குவரத்துத் துறை அங்கு கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காரணம் தற்போது பொது போக்குவரத்து இயக்கப்பட்டாலும் அது பாதுகாப்பாக இருக்குமா என்ற பயத்தில் பொதுமக்கள் தனி வாகனங்களையே அதிகளவு விரும்புகின்றனர். இதனால் வருவாய் இழப்பீடும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலைமையைத் தவிர்க்க கேரள அரசாங்கம் தண்ணீரில் இயங்கக்கூடிய புதிய டாக்சியை வரும் நவம்பரில் இருந்து இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கான ஒப்புதலையும் அம்மாநிலத்தின் வாட்டர் போர்ட் சர்வீஸ் வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புது வசதியினால் நீர் நிலைகளில் ஆங்காங்கே வாட்டர் டாக்சிகள் நிற்கும். அதற்கான தொலைபேசி எண்ணை அழைத்தால் அவர்கள் வந்து பயணிகளை பிக்அப் செய்து, வேண்டிய இடத்தில் டிராப் செய்தும் விடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
தண்ணீரில் இயங்கக்கூடிய புதிய டாக்சிகளைத் தயாரிப்பதற்கு நவீன ரக பைபர் படகுகள் உபயோகப் படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள நவ்கதி எனும் நிறுவனம் இத்தகைய டாக்சிகளை பிரத்யேக முறையில் தயாரித்து உள்ளது. எரிபொருள் செலவு குறைவான விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய வாகனங்களில் குறைந்தது 10 பேர் வரையிலும் அமர்ந்து செல்ல முடியும். அதேநேரத்தில் டாக்சி போன்று உடனுக்குடன் அழைக்கவும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.