கேரளாவில் கொரோனாவிற்கு முதல் பலி: துபாயில் இருந்து திரும்பியவர்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும் நேற்றுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. இந்த நிலையில் சற்று முன்னர் 69 வயது நபர் ஒருவர் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
கடந்த 16 ஆம் தேதி துபாயில் இருந்து திரும்பிய இந்த நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இவருக்கு இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் சமீபத்தில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பலியான முதல் நபராகவும், இந்தியாவில் கொரோனாவால் பலியான 20வது நபராகவும் இவர் உள்ளார்.
ஏற்கனவே டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பேர்களும், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா மூவரும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஐவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது