கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவியது எப்படி?
- IndiaGlitz, [Tuesday,September 07 2021]
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தச் சிறுவனுடன் நெருங்கிய தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் மற்றும் அந்தச் சிறுவன் சாப்பிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரம்பூட்டன் பழம் போன்றவை பூனே தேசிய வைரலாஜி ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கேரளாவில் ஏற்கனவே இரண்டு முறை நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் பரவிய நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழு சிறுவன் உட்கொண்டதாகக் கூறப்படும் ரம்பூட்டன் பழத்தின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர்.
மேலும் உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களில் 7 பேரின் மாதிரிகள் பூனே தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயிரிழந்த சிறுவன் அதிக எண்ணிக்கையிலான மனிதர்களுடன் தொடர்பில் இருந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இதனால் சாத்தமங்கலம் பஞ்சாயத்து ஒட்டிய பழுவூர் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் 251 பேர் முதன்மை தொடர்புகளாக சந்தேகிக்கப்பட்டு தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். பழம் திண்ணி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ் இந்த முறை எந்த தொடர்பில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உயிரிழந்த சிறுவன்தான் இந்த முறை நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரா? அல்லது வேறு யாருக்காவது இந்த பாதிப்பு இருக்கிறதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளைத் தொடர்ந்து மத்தியக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதைத்தவிர அம்மாநிலத்தின் கால்நடை பராமரித்துறை அதிகாரிகள் அந்தச் சிறுவனோடு தொடர்புடைய ஆட்டுக்குட்டியின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.