2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர்: ராணுவம் உதவ வேண்டுமென முதல்வர் கோரிக்கை!

இரண்டு நாட்களாக செங்குத்தான மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை காப்பாற்ற ராணுவ உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான மலையில் பாபு என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த திங்கட்கிழமை மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத வகையில் கால் இடரி மலையிலிருந்து உருண்டு விழுந்த அவர், மலையிடுக்கில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் அந்த இளைஞரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அந்த இளைஞரை மீட்க கடலோர காவல் படை எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் படுகாயத்துடன் மலை இடுக்கில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கி இருக்கும் இளைஞரை மீட்க இந்திய ராணுவம் உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து விரைவில் இந்திய ராணுவம் கேரளாவுக்கு விரைந்து அந்த இளைஞரை மீட்கும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.