கொரோனாவுக்கு கோயில் கட்டிய பக்தர்... ஆனால் யாருக்கும் அனுமதி இல்லையாம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை சாந்தப்படுத்தும் விதமாக சில பக்தர்கள் அதற்கு பூஜையும் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சள் குங்குமத்தோடு ஆற்றங்கரைகளில் பெண்கள் எல்லாம் ஒன்றுகூடி கொரோனா தேவிக்கு பூஜை நடத்தினர். இந்தச் சடங்கு அசாம் மாநிலத்தின் பிஸ்வந்த பூர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. தற்போது கொரோனாவின் தீவிர பக்தர் ஒருவர் கேரளாவில் கோயிலையே கட்டியிருக்கிறார். தான் கட்டியக் கோவிலில் யாரையும் தரிசனம் செய்யவும் அவர் அனுமதிப்பதில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவின் கடக்கல் பகுதியை சேர்ந்த அனிலன் என்பவர்தான் தனது வீட்டிற்கு அருகில் “கொரோனா தேவி” க்கு புதிய கோயிலைக் கட்டி இருக்கிறார். கொரோனா வைரஸ் உலகில் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மாதிரியே இந்தச் சிலையில் கோரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னிந்திய கிராமங்களில் அம்மை போன்ற நோய்களை, பெண் தெய்வத்தின் வடிவமாகக் கருதும் நம்பிக்கை இருந்து வருகிறது. அதுபோல கொரோனா வைரஸ் என்கிற கொள்ளை நோயும் தற்போது ஒரு தெய்வத்தின் வடிவமாக மாற்றியிருக்கிறார் அனிலன்.
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தபோது, அதிர்ச்சியடைந்த சில பெற்றோர்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா, லாக்டவுன் போன்ற பெயர்களை சூட்டினர். அடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைச் சாந்தப்படுத்த பூஜையும் நடத்தப்பட்டது. இப்போது கோவிலும் கட்டப்பட்டு விட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அனிலன் "இந்த கோவிலில் யாருக்கும் தரிசனம் கிடையாது. கொரோனா நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயரில் பூஜை நடத்தப்படும். பிரசாதம், பூஜை ஆகியவற்றிற்கு பணம் வாங்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார். கொரோனா தேவிக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு உதவி செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கும் அனிலனுக்கு சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout