தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன்: ரூ.25 கோடி பரிசு பெற்றவர் மனவருத்தம்!

  • IndiaGlitz, [Sunday,September 25 2022]

ரூபாய் 25 கோடி பம்பர் லாட்டரி குலுக்கலில் பரிசு வென்ற ஆட்டோ டிரைவர் தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனவருத்தத்துடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பம்பர் குலுக்கலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. தனது மகன் உண்டியலில் சேர்த்து வைத்த 500 ரூபாய் பணத்தை எடுத்து தான் இந்த பரிசு சீட்டு வாங்கியதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த பணத்தை வைத்து தொழில் செய்வேன் என்றும் உறவினர்களுக்கு உதவுவேன் என்றும் தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பரிசு பணம் ரூ.25 கோடி என்றாலும் வரிகள் போக அவருக்கு ரூ.15 கோடி தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வீட்டின் முன் தினந்தோறும் அறிமுகம் உள்ளவர்கள் அறிமுகமில்லாதவர்கள், உறவினர்கள் என ஏகப்பட்டோர் உதவி கேட்டு வருவதாகவும் அதனால் தனக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்னும் பணம் கைக்கு வரவில்லை என்று கூறினாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள் என்றும் எனவே தற்போது வீட்டிலேயே இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு உறவினர்களுக்கு உதவி செய்ய விருப்பம் தான் என்றும் ஆனால் பணம் கைக்கு வருவதற்கு முன்னரே உறவினர்கள் தன்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் இதனால் இந்த பரிசு பணமே எனக்கும் விழுந்திருக்க வேண்டாம் என்று நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடி பரிசு விழுந்ததால் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பரிசுப்பணமே அவருக்கு மிகப் பெரிய தொல்லையாக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.