வாடகை தராததால் மின் இணைப்பை துண்டித்த ஹவுஸ் ஓனர் கைது!
- IndiaGlitz, [Friday,April 24 2020]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து மாநில அரசுகளும் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கூலித் தொழிலாளி ஒருவரிடம் வீட்டு வாடகையை கொடுக்காவிட்டால் காலி செய்யுமாறு மிரட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா என்ற பகுதியில் தாமஸ் என்ற கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு வீட்டில் வாடகைக்கு கடந்த ஐந்து வருடங்களாக இருந்து வருகிறார். நான்கு பக்கமும் தகரத்தால் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்த அந்த வீட்டிற்கு அவர் ரூபாய் 1500 வாடகையாக கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த தாமஸ் குடும்பத்தினர் ரேசன் பொருட்களை மட்டுமே வைத்து சாப்பிட்டு குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென வாடகையை கேட்டு வற்புறுத்திய வீட்டின் உரிமையாளர் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் காலி செய்யுமாறு மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி மின் இணைப்பைத் துண்டித்தும், கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தும் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளனர் அதன் பின்னர் தாமஸ் குடும்பத்தினருக்கு மின் இணைப்பு உட்பட அத்தியாவசியப் தேவையை போலீசார் பூர்த்தி செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஹவுஸ் ஓனர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.