சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்
- IndiaGlitz, [Thursday,August 10 2017]
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
முருகனுக்கு சிகிச்சை அளிக்க கொச்சி, திருவனந்தபுரம் மருத்துவமனைகள் மறுத்துவிட்டதால் சிகிச்சை பெறாமலே சுமார் 8 மணி நேரம் ஆம்புலன்ஸ் அலைக்கழிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிகிச்சை அளிக்க தவறிய ஐந்து மருத்துவமனைகள் மீது மனித உரிமை கமிஷன் புகாரின் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா கூறியபோது, 'முருகனுக்கு சிகிச்சை அளிக்காததன் காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.
இந்த நிலையில் மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார். மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த பதிவுகள் கேரள முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.