பெண்ணின் நிர்வாணத்தை உடலுறவாகப் பார்க்க முடியுமா? கேரள நீதிமன்றம் அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்ணின் நிர்வாணத்தை பாலியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது. மேலும் ஆபாசமாகவோ அல்லது அநாகரிகமாகவோ சித்தரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நிர்வாணத்தைப் பொறுத்தவரைக்கும் சமூகத்தில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது என்று கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பினை கடந்த 2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாத இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று ரெஹானா பாத்திமா என்பவர் கோவிலுக்குள் நுழைய முற்பட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்த ரெஹானா பாத்திமா மீதான வழக்கு ஒன்று தற்போது மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது மேலாடையின்றி ரெஹானா காட்சியளிக்க, குழந்தைகள் அவரது உடலில் ஓவியம் வரைவது போன்ற ஒரு வீடியோவை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தார். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை எடுத்துக்காட்டும் விதமாக தனது உடலில் ஓவியம் வரைவதற்கு அனுமதித்தாகக் கூறி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் சமூகவலைத் தளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோ மீது போக்சோ சட்டம், ஐடி சட்டம், குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.
அதில் பெண்ணின் நிர்வாணத்தை பாலியல் ரீதியாக பார்க்கப்பட கூடாது. அதன் சூழலை கருத்தில் கொண்டே முடிவு செய்ய முடியும். ஆண்கள் சட்டை அணியாமல் மேலாடையின்றி வலம் வருகின்றனர். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு தனது உடலை காட்சிப்படுத்துகின்றனர். ஆனால் அதை நிர்வாணமாக நாம் பார்ப்பதில்லை. அதேபோல கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகள் எல்லாம் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன. பெரும்பாலான பெண் தெய்வங்கள் உடையின்றியே இருக்கிறது. கோவிலுக்குள் செல்லும் நமக்கு பாலியல் ரீதியான பார்வை இருப்பதில்லை.
ஆனால் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது காலம் காலமாக பாலியல் ரீதியான பார்வை சுமத்தப்பட்டு வருகிறது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு முன் மேலாடையின்றி இருந்ததையும் ஓவியம் வரைய அனுமதித்ததையும் பாலியல் ரீதியாக அணுகமுடியாது என்று கூறி ரெஹானா பாத்திமா மீதான வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த விளக்கத்தின்போது பெண்களின் நிர்வாணத்தில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. திருச்சூரில் நடக்கும் புலிகலி திருவிழாக்களில் ஆண்களின் உடல்களில் ஓவியம் வரைவது ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் நிர்வாணம் பாலியல் ரீதியாகவே அணுகப்படுகிறது. பெண்ணின் நிர்வாணம் இங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments