தனிமையில் ஆபாச படம் பார்த்தால் குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம் கருத்து..!
- IndiaGlitz, [Wednesday,September 13 2023]
தனிமையில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சாலை ஓரத்தில் ஆபாச படம் பார்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணை வந்த நிலையில் ஆபாச படங்களை ஒருவர் தனிமையில் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்றும் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் இத்தகைய செயலை குற்றமாக அறிவிப்பது தனிமனித உரிமை மீறும் செயல் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டம் 292ன் கீழ் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதனால் அவர் மீதான சட்ட நடவடிக்கை அனைத்தையும் ரத்து செய்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏதேனும் ஆபாச வீடியோ அல்லது புகைப்படத்தை பரப்பவோ அல்லது விநியோகம் செய்திருந்தால் தான் குற்றம் என்றும் தனிமையில் அவர் ஆபாச படம் பார்ப்பதை குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.