தங்கக்கடத்தல் அரங்கேறுவது எப்படி??? கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் புதிய சர்ச்சை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள முதலமைச்சரின் செயலாளர் முதற்கொண்டு முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாக தற்போது கேரளாவின் தங்கக்கடத்தல் வழக்கு மாறியிருக்கிறது. இதனால் கேரள அரசாங்கத்திற்கு புதிய தலைவலியே ஏற்பட்டு இருக்கிறது என்றுகூட சொல்லலாம். ஏனெனில் வெறுமனே 30 கிலோ தங்கத்தோடு இந்த விஷயம் முடிந்து விடவில்லை என்ற புதிய அதிர்ச்சித் தகவலை கேரள சுங்கத்துறை மற்றும் கடத்தல் பிரிவு தெரிவித்து இருக்கிறது. இந்த விவகாரம் பூதாகரமாக மாறியிருப்பதால் கேரள அரசாங்கம் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பை (CBI) நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூதர அதிகாரிகளுக்கு ஒரு பார்சல் வந்தது. பொதுவாக தூதர அதிகாரிகளின் அலுவலகத்திற்கு வரும் பெரும்பாலான பார்சல்களை சுங்கத்துறையினர் சரிபார்ப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலை சரிபார்ப்பது என்ற முடிவிற்கு வந்தனர். பார்சலை சரிபார்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பே இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா தலை மறைவாகிறார்.
இப்படி பல முறை தங்கக்கடத்தல் வழக்குகள் பதிவாவது உண்டு. ஆனால் முக்கியக் குற்றவாளிகள் இதுவரை பிடிபட்டதே இல்லை. காரணம் ஐக்கிய எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் நபர்கள் பெரும்பாலும் முக்கிய அதிகாரிகள் மற்றும் திரைப் பிரபலங்களைப் பயன்படுத்தப் படுவதாகச் சுங்கத்துறை சார்பில் குற்றச் சாட்டப்படுகிறது. அதிகாரிகள் மட்டத்தில் உள்ள முக்கிய நபர்களை இந்த கடத்தலுக்கு பயன்படுத்துவதால் பெரும்பாலும் குற்றங்கள் காவல் துறையினரின் கண்ணில் படாமல் பாதுகாப்பாக நடைபெறுவதாகவும் கேரள சுங்கத்துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாது திரைத் துறையினருக்கும் இதில் பங்கு ‘இருப்பதாகத் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
பல நேரங்களில் ஐக்கிய அரசு நாடுகளில் இருந்தே கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் காட்மாண்டு நிறுத்தத்தில் சம்பந்தப் பட்ட குற்றவாளி இறங்கி இந்தியா-நேபாளம் வழியாக சாலையில் பயணம் செய்து இறுதியில் கேரளாவிற்கு தங்கத்தைக் கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படியில்லாமல் முக்கியப் பிரபலங்கள் வழியாக தங்கத்தைக் கடத்தும்போது முன்னமே தகவல் கேரளாவில் இருக்கும் நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. தங்கம் கேரள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் மிக எளிதாகப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர் நகர்ந்து விடவும் செய்கின்றனர். பல நேரங்களில் குற்ற வழக்கு பெரிதாக போகிறபோது கொலையும் நடக்கலாம் என காவல் துறையினர் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் முதல்வரின் செயலாளர் சிவசங்கரனுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாக அரசியல் மட்டத்தில் சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து செவ்வாய்கிழமை பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பெட்டிகள் திறக்கப்படுவதற்கு முன்பே தலைமறைவானார்
யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்
திருவனந்தபுரம் அருகே இருக்கும் பலராமபுரம் பகுதியைச் சார்ந்தவர் இந்த ஸ்வப்னா சுரேஷ். அவருடைய அப்பா அபுதாயில் தங்கியிருப்பதால் ஸ்வப்னா சுரேஷ் அபுதாயில் பிறந்து அங்கேயே படித்து வளர்ந்ததால் அரபு மொழியை சரளமாக பேசக்கூடிய திறமை உடையவர் என்று சொல்லப்படுகிறது. மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளையும் மிகச் சரளமாகப் பேசக் கூடியவர். அபுதாபியில் இருந்து இந்தியாவிற்கு வந்தபின்பு 2013 இல் AISTAS என்ற விமான சேவை நிறுவனத்தில் மனிதவள நிர்வாகியாக பணியில் சேர்ந்து இருக்கிறார். டிராவல் ஏஜென்சியில் பணிபுரியும்போது பல்வேறு பாலியல் குற்ற வழக்குகளைப் பொய்யாக கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. அப்படி பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஸ்வப்னா மீது குற்ற வழக்கையும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் முக்கிய அதிகாரிகளின் துணை ஸ்வப்னாவிற்கு இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையும் இடையிலே நின்றதாகச் செய்கிதள் தெரிவிக்கின்றன.
பின்பு தந்தையின் உடல் நிலை காரணமாக எமிரேட் தூதரகத்திற்கு சென்று சிறுது காலம் தங்கியிருந்ததால் அங்குள்ள முக்கிய நபர்களின் பழக்கம் இவருக்கு கிடைத்து இருக்கிறது. முக்கியமாக ஷார்ஜா சத்தார் ஸ்பைசால் போன்ற பெரிய நிறுவனங்களில் தொடர்பு மிக எளிதாக இவருக்குக் கிடைத்து இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஆரம்பிக்கப் பட்டபோது அதன் முக்கியப் பொறுப்பில் இவர் அமருகிறார். கேரள அரசாங்கம் மலையாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் இவருடைய வேலை மிக எளிதாக அங்கீகரிக்கப் படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் நிர்வாகியாக பணியமர்த்தப்பட்ட பின்பு பல முக்கிய நபர்களின் தொடர்பு இவருக்கு கிடைக்கிறது. படிப்படியாக உயருகிறார். பணியில் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதை எளிதாக மறைத்துவிடும் வலிமையும் இவருக்கு வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிரிமினல் குற்ற வழக்கில் மாட்டியதற்காக பணியில் இருந்து வெளியேற்றப் படுகிறார். பின்பு முதலமைச்சரின் செயலாளர் ஆக இருந்த சிவசங்கரன் ஆதரவோடு கேரள மாநிலத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (KSITIL) மேலாளராக பணியமர்த்தப் படுகிறார். இந்த வேண்டுகோளை சிவசங்கரன் வாட்டர் கூப்பஸ் நிறுவனத்தின் மூலமாக வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தூதரக அதிகாரியாக இருந்தேன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகத் தற்பாது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவதால் இறக்குமதி வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். தற்போது நடைபெற்றுள்ள 30 கிலோ தங்கக்கடத்தல் மூலம் 5 விழுக்காடு வரி ஏய்ப்பு மட்டுமே நடந்திருக்கிறது. ஆனால் கடந்த 2018-2019 ஆம் ஆண்டுகளில் 401 கிலோ தங்கத்தைக் கடத்தி 15 விழுக்காடு வரி ஏய்ப்பு செய்யப் பட்டு இருக்கிறது என்று கேரள சுரங்கத்துறை அதிகாரிகள் தகவல் கொடுக்கின்றனர். 2019 – இல் இருந்து தற்போது வரை கேரளாவில் 550 கிலோ தங்கம் கடத்தப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் மேலும் அதிகமான வரி ஏய்ப்பில் முதலாளிகள் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது. இப்படி சுங்கத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தங்கத்தைக் கடத்துவதால் ஒரு கிலோவிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும் எளிதாக லாபம் பார்க்க முடியும் என்றும் வியாபாரிகள் கணக்கு சொல்கின்றனர்.
கேரளா அரசின் செயல்பாடுகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் தற்போது கேரளச் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாது பல்வேறு திரை நட்சத்திரங்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்ற செய்தியை மட்டும் சொல்லியிருக்கும் சுங்கத்துறை அவர்களின் பெயர்களை இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்தியப் புலனாய்வு அமைப்பு இந்த வழக்கில் தலையிடும்போது மேலும் அதிகபடியான குற்ற வழக்குகள் பதிவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments