தமிழகம் வரை நீளுகிறதா கேரளத் தங்கக்கடத்தல் விவகாரம்!!! தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ!!!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

 

கேரள அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தமிழகத்திலும் நடத்தப்பட இருப்பதாகத் தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு ஒரு பார்சல் வந்தது. பொதுவாக மதியாதை கருதி தூதர அலுவலகத்திற்கு வரும் பார்சலை சுங்கச்சாவடி அதிகாரிகள் சோதனை செய்து பார்ப்பதில்லை. ஆனால் ஏற்கனவே தங்கக்கடத்தல் பற்றிய ரகசிய தகவல் வந்ததால் பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்க்க முடிவு செய்தனர். இந்தப் பார்சல் பிரிக்கப் படுவதற்கு முன்பே கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். பின்னர் கேரளக் காவல் துறை அவரை கைது செய்தது.

ஸ்வப்னா சுரேஷை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை செய்தபிறகு இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேரை கேரளக் காவல் துறை கைது செய்தது. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரின் தலைமை செயலதிகாரி உட்பட பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. மேலும் ஸ்வப்னா சுரேஷின் லாக்கரில் இருந்து 1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்து இருந்தது. தற்போது கேரள விமான நிலையம் மட்டுமல்லாது தமிழகத்தின் சில முக்கிய விமான நிலையங்களிலும் இவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் தேசியப் புலனாய்வு அமைப்பு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்காக தமிழகத்திலும் விசாரணை நடத்த அனுமதி கோரப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் பல முறை முறைகேடான தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதிலும் சென்னை விமான நிலையத்தில் மட்டும் அதன் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பின் சார்பில் 4 வழக்குகளில் மட்டும் 74.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்ட கடத்தல் கும்பல் மூலமாக தகவல் பெறப்பட்டு சூளைமேட்டில் 20.6 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதில் 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பினர் கைதும் செய்தனர். துபாயில் இருந்து இலங்கை வழியாக கொண்டுவரப்பட்ட தங்கம் அங்கிருந்து படகின் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அடுத்து பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 2 வெளிநாட்டு பெண்களிடம் 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இவர்கள் ஹாங்காங்கில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாகவும் தகவல் கொடுத்தனர். இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2 கொரிய பெண்களிடம் இருந்து 24 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. மேலும் 9.8 கிலோ தங்கக்கடத்தல் தொடர்புடைய விவகாரத்தை தற்போது சென்னை சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்படி அடுக்கடுக்காக கடந்த வருடத்தில் தமிழகத்தில் பல தங்கக்கடத்தல் விவகாரங்கள் தொடர்ந்து நடைபெற்று இருக்கின்றன. எனவே இந்தக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்புடையவர்கள் குறித்து சந்தேகத்தை எழுப்பிய தேசியப் புலனாய்வு அமைப்பு தற்போது தமிழகத்திலும் விசாரணையை நடத்த ஆர்வம் கொண்டிருக்கிறது.

இதேபோல இரண்டு வருடங்களுக்கு ஆந்திரா விஜயவாடாவில் பிடிபட்ட 64 கிலோ தங்கக்கடத்தல் விவகாரத்தைக் குறித்தும் தற்போது அந்த அமைப்பினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு வழக்கு தற்போது இந்தியா முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி அனைத்து வழக்குகளையும் தூசித் தட்டியிருக்கிறது என்பது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனபதும் குறிப்பிடத்தக்கது.