வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கேரள யானையை போல மேலும் ஒரு துயரச்சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

 

கேரளாவில் கடந்த மாதம் அன்னாசி பழத்தில் வைக்கப் பட்ட வெடிமருந்தால் ஒரு யானை அநியாயமாக உயிரிழந்தது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதைப்போலவே தற்போது தமிழகத்திலும் ஒரு துயரச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுண்டப்பட்டி பகுதியில் உள்ள ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. யானையை பரிசோதனை செய்து பார்த்த வனத்துறையினர் அது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதையடுத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் தோட்டத்திற்குற்குள் யானை புக முயற்சித்ததாகவும் அதனால் யானையை சுட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவிவருகிறது. மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனையில் பெண் யானையின் இடது காது அருகே குண்டு துளைத்து ஆது மூளை வரை சென்று தாக்கியதால் யானை உயிரிழந்ததாக விளக்கப் பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்து பெண் யானைக்கு பிறந்த குட்டி தற்போது வேறு சில பெண் யானைகளோடு இருப்பதாகவும் அதை வனத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். பெண் யானை தோட்டத்திற்கு வரக்கூடாது என்ற காரணத்திற்காக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தற்போது கோவை பகுதியல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் உடல் நலக்குறைவு காரணமாக மற்றொரு பெண் யானையின் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதைப்போல தமிழக வனப்பகுதிகளில் யானைகள் அடிக்கடி இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.