மீன் விற்றதாக கேலி செய்யப்பட்ட மாணவி கொடுத்த ரூ.1.5 லட்சம் வெள்ள நிதி
- IndiaGlitz, [Saturday,August 18 2018]
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனன் என்பவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து கொண்டே பகுதி நேரமாக மீன் விற்று வந்தார். கல்லூரி உடையுடன் இவர் மீன் விற்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த ஒருசிலர் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை அடைந்ததை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவருக்கு தேவையான உதவிகளை கேரள அரசு செய்யும் என வாக்களித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கின்றது. கேரளாவை மீட்டெடுக்க தாராளமாக நிதியுதவி செய்யுங்கள் என கேரள முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மீன் விற்றதாக கேல்லி செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஹனன் ரூ.1.5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அவர் கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இந்த ரூ.1.5 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். தற்போது கேலி செய்த அதே நெட்டிசன்கள் ஹனனை பாராட்டி வருகின்றனர்.