மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,March 30 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் மது குடிக்காமல் இருந்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், மது அருந்த முடியாததால் ஒருசிலர் தற்கொலை முடிவை எடுத்து வருவதாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடி உள்ளதால் கேரளாவில் மட்டும் 7 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் மது குடிக்காமல் தற்கொலை செய்வதை தடுக்க கேரள அரசு தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. இதன்படி மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மது குடிக்காமல் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மருத்துவரிடம் சென்று பரிந்துரை சீட்டு வாங்கி வந்தால் மது கிடைக்கும் என்பது குடிமகன்களுக்கு ஒரு சந்தோசமான செய்தியாக உள்ளது. இருப்பினும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதற்கு ஊரடங்கு உத்தரவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.