தலைமை தேர்தல் அதிகாரியிடமே ரூ.75,000 கொள்ளை..! விமான பயணத்தில் நடந்த சம்பவம்.

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் டீக்காராம் மீனா. இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு வந்தார். விமானப் பயணத்தின்போது அவரது பையில் வைத்திருந்த பணத்தை யாரோ கொள்ளையடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து டீக்காராம் மீனா, வலியத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லக்கேஜ் பேக்கில் ரூ.75,000 வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வலியத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விமானத்தில் வைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய வலியத்துறை போலீஸார், ''விமான நிலையத்தின் கன்வேயர் பெல்டில் அவரது லக்கேஜ் இருந்தபோது திருட்டு நடந்ததா என சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்யுமாறு கூறியிருக்கிறோம். அதேபோல், அவர் பயணித்த விமானத்தின் ஊழியர்களிடமும் விசாரிக்க இருக்கிறோம்'' என்றனர். கடந்த 9ம் தேதி ஜெய்ப்பூரிலிருந்து திருவனந்தபுரம் பயணித்த கேரளத் தலைமைத் தேர்தல் ஆணையர் டீக்காராம் மீனா, பிளாஸ்டிக் கவர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயமானதை திங்கள்கிழமை மதியமே கண்டுபிடித்திருக்கிறார்.