சொகுசு பேருந்து கிலோ ரூ.45… விரக்தியில் கூவிகூவி விற்கும் முதலாளியின் பரிதாபம்!

  • IndiaGlitz, [Monday,February 14 2022]

கேரளாவில் பேருந்து உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சொகுசு பேருந்துகளை கிலோ ரூ.45 என்று கூறுபோட்டு விற்கும் மோசமான அவலம் நடந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அந்த ஊர் வாகன உரிமையாளர் சங்கத்தினர் இதுவே முதல்முறையல்ல எனக்கூறி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

கேரளாவில் பேருந்து உரிமையாளராக இருந்துவரும் ராய்சன் ஜோசப் கொரோனாவிற்கு முன்பு 20 சொகுசு பேருந்துகளை வைத்துக்கொண்டு சுற்றுலா போன்ற இடங்களில் இயக்கி வந்துள்ளார். பின்னர் பெரிய அளவிற்கு வருமானம் இல்லாமல் தவித்துவந்த இவருக்கு கொரோனா தளர்வு காரணமாகச் சமீபத்தில் பேருந்துகளை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பேருந்திற்கும் சாலைவரி 44 ஆயிரம் ரூபாயும் காப்பீட்டுத் தொகை 88 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டிவந்துள்ளது.

வருமானம் இல்லாததால் இதைச் செலுத்த முடியாமல் தவித்துவந்த ராய்சன் முன்பதிவு செய்துள்ள வாகனங்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டு இருப்பதைப் பயன்படுத்தி தனது சில பேருந்துகளை மட்டும் இயக்கி இருக்கிறார். ஆனாலும் சலுகை வழங்கப்பட்ட தனது பேருந்தை காவலர்கள், நடுவழியிலேயே நிறுத்தி தொடர்ந்து அபராதம் விதித்து வருவதாக ராய்சன் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேவையே இல்லாமல் தொடர்ந்து அபராதம் என்ற பெயரில் எனது பணத்தை காவலர்கள் பறித்து வருகின்றனர். இந்தத் தொல்லையை என்னால் தாங்க முடியவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்த ராய்சன் சொகுசு பேருந்து கிலோ ரூ.45 எனக் கூவிகூவி விற்பனை செய்துவரும் வீடியோ சமூகவலைத் தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 10 பேருந்துகளை ராய்சன் பிரித்துப் போட்டு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய கேரளாவின் வாகன உரிமையாளர் சங்கத்தலைவர் கொரோனாவிற்குப் பிறகு பேருந்து உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல உரிமையாளர்கள் தங்களது பேருந்துகளை ராய்சனைப் போலவே விற்பனை செய்துவருகின்றனர் எனும் அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.