மிகப்பெரிய பங்களா கட்டிய ஒரே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்!
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
கேரளாவிலேயே மிகப்பெரிய பங்களா கட்டிய தொழிலதிபர் ஒருவர் துபாயில் 14 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் என்பவர் துபாயில் அக்கவுன்டன்ட்டாகப் பணிபுரிந்து அதன்பின்னர் இன்னோவா குரூப் நிறுவனங்களைத் தொடங்கினார். எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் போன்ற துறைகளில் ஈடுபட்ட இந்த குழுமத்திற்கு நல்ல வருவாய் கிடைத்தது. இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக கேரளாவை சேர்ந்த பலருக்கும் துபாயில் தன் நிறுவனத்தில் ஜாய் அரக்கல் வேலைவாய்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கப்பல் வர்த்தகத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தொழிலதிபர் ஜாய் அரக்கல் அவர்களுக்கு பயங்கர நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி துபாயில், பே ஏரியா பகுதியில் உள்ள கட்டடத்தின் 14- வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 54 என்பதும் இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் தான் இவர் கேரளாவில் தனது சொந்த ஊரான மானந்தவாடியில் 45,000 சதுர அடி பரப்பளவில் சொகுசு பங்களா ஒன்றை கட்டினார். இந்த பங்களாவுக்கு குடும்பத்துடன் குடிவந்த ஒரே மாதத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் 10 ஆண்டுக்காலம் செல்லுபடியாகக் கூடிய, கோல்டன் விசா பெற்ற இரண்டாவது இந்தியரான தொழிலதிபர் ஜாய் அரக்கல் உடலை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு கேரள முதல்வர் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது