பலூன் விற்கும் சிறுமி மாடலாக மாறிய அதிசயம்… நெகிழ்ச்சியில் வைரலாகும் புகைப்படம்!
- IndiaGlitz, [Wednesday,March 09 2022]
ஒரு புகைப்படம் ஒருவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார் பலூன் விற்கும் சிறுமி கிஸ்பு. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு புகைப்படத்திற்கு இவ்வளவு வலிமையா என்று வியப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கேரளாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்த சிறுமி கிஸ்பு என்பவர் கேரளாவில் அதிகமான மக்கள் கூடும் இடமான ஆண்டலூர் காவு எனும் பகுதியில் பலூன்களை விற்றுவந்துள்ளார். இவரைப் பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் சிறுமியைப் புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கிஸ்புவின் புகைப்படத்திற்கு ஏராளமான வரவேற்பை கொடுக்க இதனால் புகைப்படக் கலைஞர் அர்ஜுன் அச்சிறுமிக்கு உதவும் வகையில் ஏராளமான போட்டோஷுட்களை நடத்தி மேலும் அதிகமான புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமி கிஸ்பு தற்போது தேர்ந்த ஒரு மாடலாக மாறியிருக்கிறார். மேலும் சோஷியல் மீடியா பக்கத்தில் இவருடைய புகைப்படங்கள் அதிகளவில் கவனம் பெற்றுவருகிறது. இதனால் கிஸ்புவின் வாழ்க்கையில் தற்போது மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. முன்னதாக கூலித்தொழிலாளி மிமிக்காவின் வாழ்க்கையை ஒரு புகைப்படக் கலைஞர் மாற்றியிருந்தார்.
அதேபோல மேற்கு வங்க ரயில் நிலையத்தில் பாட்டுப் பாடி பிழைப்பை நடத்திவந்த ரானு மரியா மண்டல் தற்போது பாலிவுட்டில் முன்னணி பாடகியாக அறியப்படுகிறார். அந்த அளவிற்கு சோஷியல் மீடியா பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அந்த வரிசையில் பலூன்களை விற்றுவந்த கிஸ்பு தற்போது மாடலாக அவதாரம் எடுத்துள்ளார். இவரது வாழ்க்கையிலும் ஒளிவீசட்டும் என்றும் ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.