கணவரிடம் இருந்து கமிஷனர் பதவியை பெற்ற ஐபிஎஸ் அதிகாரி
- IndiaGlitz, [Thursday,June 08 2017]
காவல்துறையை பொருத்தவரையில் ஒரு அதிகாரி மாற்றலாகி போகும்போது அந்த பதவிக்கு புதியதாக வரும் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால் கொல்லத்தில் நடந்த ஒர் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. காரணம், கொல்லம் கமிஷனர் வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்வதும், அவருடைய பதவிக்கு அவருடைய மனைவியே நியமனம் செய்யப்பட்டிருப்பதும்தான்
ஆம், இதுவரை கொல்லம் சிட்டி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் பினோ என்பவர் பத்தனம் திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். அவரது மனைவி அஜிதா பேகம் கொல்லம் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். எனவே கொல்லம் கமிஷனர் பதவிப்பொறுப்பை புதியதாக பதவியேற்ற தனது மனைவியிடம் ஒப்படைத்தார் சதீஷ்
இதுகுறித்து அஜிதா பேகம் குறிப்பிடும்போது, 'கணவரிடம் இருந்து மனைவி பதவிப்பொறுப்பை பெறுவது என்பது வழக்கமான ஒரு செயல் இல்லை என்றாலும் என்னை பொறுத்தவரையில் நான் ஏற்கும் புதிய மற்றொரு பொறுப்பாகவே கருதுகிறேன். அதுமட்டுமின்றி மூன்றாவது குழந்தை பிறப்பிற்காக பிரசவ விடுமுறைக்கு சென்ற பின்னர் பொறுப்பேற்கும் பதவி என்பதை பொறுத்தவரையில் இந்த பணி எனக்கு ஸ்பெஷல் தான் என்றும் அஜிதாபேகம் கூறினார்.
கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிவது குறித்து அஜிதாபேகம் கூறியபோது, 'இருவருமே ஒரே பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதால் இருவரும் ஒரே மாவட்டத்தில் பணிபுரிவது சாத்தியமில்லை தான். இருப்பினும் கேரள பெண்களின் பெரும்பாலான கணவர்கள் அரபு நாடுகளில் பணிபுரிந்து வருவதை ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லை' என்று நகைச்சுவையுடன் கூறினார்.
கணவர் வகித்த அதே பதவி மனைவிக்கு கிடைத்ததும் அந்த பொறுப்பை மனைவியிடம் கணவரே ஒப்படைத்ததும் கேரள ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.