மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரம்: திலீப் ஜாமீன் மனு குறித்து கேரள ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமின் மனு இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை அங்கமாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் திலீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி சுனில் தோமஸ் அவர்கள் வாதாடுகையில் 'நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் இன்னும் கிடைக்காததாலும், தேவைப்பட்டால் திலீப்பிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அவரை ஜாமீனில் விடக்கூடாது' என்று கூறினார்.
முன்னதாக திலீப்பின் வழக்கறிஞர் 'இந்த வழக்கு திலீப்பின் திரையுலக பயணத்தை சீர்குலைக்கவே போடப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், இதனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சற்று முன் தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து திலீப் தரப்பினர் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.