கென்னடி கிளப்: கெத்தான ஸ்போர்ட்ஸ் திரைப்படம்
'வெண்ணிலா கபடிக்குழு' என கபடி திரைப்படம் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய இயக்குனர் சுசீந்திரன் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் கபடிக்களத்தை தேர்வு செய்து, அதில் சசிகுமார் மற்றும் பாரதிராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இந்த கபடிக்களம் எப்படி உள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
ஒட்டன்சத்திரம் நகரில் அன்றாட கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் மகள்களுக்கு சிறுவயதில் இருந்தே கபடி வீராங்கனைகளாக வேண்டும் என்பது ஆசை. அவர்களின் கனவை நனவாக்க பயிற்சி அளிக்கின்றார் பாரதிராஜா. பாரதிராஜாவின் கென்னடி கிளப் அணி மாநில அளவிலான போட்டியில் விளையாடவிருக்கும் நேரத்தில் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, பாரதிராஜாவின் கோச் பொறுப்பை அவருடைய மாணவர்களில் ஒருவரான சசிகுமார் ஏற்கிறார். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் கென்னடி கபடிக்குழுவை சசிகுமார் கொண்டு சென்றாரா? அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? விளையாட்டுத்துறையில் சாதிக்க தடைகளாக இருப்பவை எவை எவை? அதில் உள்ள அரசியல் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை
கபடி கோச் வேடத்தில் சசிகுமார் மிகவும் பொருத்தமாக உள்ளார். வழக்கம்போல் தியாகம், எதிரிகளுடன் மோதும்போது ஒரு எகத்தாளம், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பு என புகுந்து விளையாடுகிறார். அவ்வப்போது குரு பாரதிராஜாவிடமும் மோதுகிறார். முரளி ஷர்மாவுடன் மோதும் காட்சிகளில் கெத்து காட்டுகின்றார். ஆனாலும் ஒரு தொழில்முறை பயிற்சியாளர் என்ற அளவில் ஏதோ மிஸ் ஆகிறது. கபடியின் சின்னச்சின்ன நுணுக்கங்களை வீராங்கனைகளுக்கு சொல்லி கொடுக்கும் காட்சிகள் கடைசி வரை படத்தில் இல்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் கிஷோர் இந்த கேரக்டரை வெகு சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பாரதிராஜாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும் அவர் தோன்றும் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கு தனது கேரக்டரை மெருகேற்ற முயற்சித்துள்ளார். கபடி பெண்களை கிண்டல் செய்யும் லோக்கல் ரவுடிகளிடம் பேசும் வசனத்தின்போது தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் அத்தனை பெண்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குனர் அனைவரையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார்.
டி.இமானின் இசையில் 'உன்னாலே உன்னாலே முடியாதென்றால்', வார்றான் உன்னை வச்சு செய்ய வாரான்', கபடி கபடி ஆகிய மூன்று பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திற்கு தேவையான சரியான பின்னணி இசை. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் கபடிக்காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் அசத்தல். எடிட்டர் அந்தோனி படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்தது கச்சிதம்.
ஒரு கிராமத்தில் இருந்து உருவாகும் கபடி அணி தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அதில் இருக்கும் அரசியல் என்ன? வீராங்கனைகளின் குடும்ப சூழ்நிலை என்ன? என்பதை இயக்குனர் சுசீந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் ஆடியன்ஸ்களுக்கு புரிய வைத்து படத்தை தொடங்குகிறார். இதில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையும் பல ஸ்போர்ட்ஸ் படங்களில் பார்த்தது என்றாலும் சலிக்கவில்லை. 'அனுபவத்தை விட சிறந்த அறிவுரை வேறு எதுவும் இல்லை', 'மற்றவங்களுக்கு இது ஸ்போர்ட்ஸ் ஆனா நமக்கு இது வாழ்க்கை' போன்ற வசனங்கள் எழுச்சிமிக்கவை. கிளைமாக்ஸ் காட்சியில் கடைசி ரைடில் ஏற்படும் திருப்பம் யாருமே எதிர்பாராதது. சீட் நுனிக்கு அனைவரையும் கொண்டு சென்றுவிட்டது. அதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.
ஆனாலும் பாரதிராஜாவின் கேரக்டரை வடிவமைப்பதில் மட்டும் இயக்குனர் கொஞ்சம் திணறி இருக்கின்றார். அவரையே திடீரென வில்லன் போல் காண்பிப்பதும் சசிக்குமாரை புரிந்து கொள்ளாமல் செயல்படுவதும் அவரது கேரக்டருக்கு முரண்பாடாக உள்ளது. மேலும் கிளைமாக்ஸில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பாரதிராஜா பேசும் வசனங்களும் செயற்கையாக உள்ளது.
மொத்தத்தில் ஆங்காங்கே சில செயற்கைத்தனமான காட்சிகள் இருந்தாலும் கபடிக்கு பெருமை சேர்க்கும் இன்னொரு படமாக இருப்பதாலும், விளையாட்டுத்துறையில் உள்ள அரசியலை வெளிச்சம் போட்டும் காட்டும் படமாகவும் இருப்பதால் பார்க்க வேண்டிய படம் தான்
Comments