தண்ணீர் பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி: இயக்குநர் எம்.ஏ. நிஷாத்
- IndiaGlitz, [Friday,January 19 2018]
கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' முதல் கோபி நயினார் இயக்கிய 'அறம்' வரை கோலிவுட் திரையுலகில் தண்ணீர் பிரச்சனையை அலசும் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இதே பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி'
மலையாளத்தில் சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ஏ. நிஷாத் இயக்கியுள்ள முதல் தமிழ்ப்படமான 'கேணி' படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடலில் “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ. நிஷாத் கூறியதாவது: கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.