4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷ்
- IndiaGlitz, [Wednesday,November 16 2016]
பிரபல நடிகை மேனகாவின் மகளும் பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷுக்கு நமது வாழ்த்துக்கள்
கடந்த 2000ஆம் ஆண்டு முதலே குழந்தை நட்சத்திரமாக கீர்த்திசுரேஷ் நடித்து வந்த போதிலும் 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்த 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரியர்தர்ஷன் இயக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற இவர் இந்த படத்தின் வெற்றியை அடுத்து 'ரிங் மாஸ்டர்' என்ற படத்தில் நடித்தார்.
இதன் பின்னர் தமிழுக்கு வந்த கீர்த்திசுரேஷ், இயக்குனர் விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
ஆனால் அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் மெகா ஹிட் ஆகியது. இந்த படம் வெளியாக தாமதமான போதிலும், இந்த படத்தின் வெற்றியால் அவருக்கு கிடைத்த பம்பர் பரிசு இளையதளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு. ஆம், விஜய்யின் 'பைரவா' படத்தில் நடிக்க பல முன்னணி நாயகிகள் முயற்சி செய்த வந்த போதிலும் தமிழில் இரண்டே படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெளிவந்த பின்னர் கீர்த்திசுரேஷின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படமும் கீர்த்திசுரேஷின் நடிப்பிற்கு நல்ல பெயர் வாங்கி தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. சரோஜா என்ற கள்ளங்கபடம் இல்லா வெகுளிப்பெண் கேரக்டரில் பல படங்கள் நடித்து அனுபவமுள்ள நடிகையின் நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்பின்னர் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கிர்த்திசுரேஷ் ஒரு ராசியான நடிகை என்ற முத்திரையை திரையுலகம் குத்தியது. ரஜினிமுருகன் வெற்றிக்கு பின்னர் 'பைரவா' பட வாய்ப்பு கிடைத்தது போல் 'ரெமோ' வெற்றிக்கு பின்னர் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்முறையாக சூர்யா மற்றும் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் கீர்த்திசுரேஷ், பாபிசிம்ஹா நடித்து வரும் 'பாம்புச்சட்டை'; படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
திறமை, அழகு, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கே பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி சுரேஷ் இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று Indiaglitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.