கீழக்கரை ஊரையே பதட்டமாக்கிய கொரோனா பாதித்த குடும்பம்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
கீழக்கரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியான ஒருவரின் குடும்பம், அந்நகரையே அச்சுறுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் சென்னை மண்ணடியில் தங்கி வெளிநாடுகளுக்கு சுறா மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. தொழில் விஷயமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வரும் இவர் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய போது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்
இதனை அடுத்து ஒரு சில நாட்களில் அந்த தொழிலதிபர் சளி இருமல் காய்ச்சல் ஆகியவைகளால் பாதிப்படைந்ததால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால் கொரோனா ஆய்வு முடிவு வருவதற்கு முன்பாக அவரது மகன் தனது செல்வாக்கை பயன்படுத்தி உயர் அதிகாரி ஒருவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக கொடுத்து அவரது ஒத்துழைப்புடன் தனது தந்தையின் சடலத்தை சென்னையில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கையும் முடித்து விட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் இறந்த தொழிலதிபரின் இரத்தப் பரிசோதனை முடிவு வந்த போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது இறுதிசடங்கில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்பட சுமார் 300 பேர் தனித்திருக்க சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமன்றி கீழக்கரையில் அனைத்து தெருக்களும் சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கீழக்கரையில் இருந்து வெளியே செல்லவும் கீழக்கரைக்கு வெளியூர் ஆட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலதிபரின் மகன்கள் மீது குறித்து உண்மையை மறைத்து ஊரடங்கு உத்தரவையும் மீறி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கீழக்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இறந்த தொழிலதிபரின் மகள்கள் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் கொந்தளித்த எழுந்த கீழக்கரை பொதுமக்கள் அந்த குடும்பத்தினர் மீது ஆத்திரத்தில் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் வீட்டில் நிம்மதியாக இருந்த நிலையில் இந்த ஒரு குடும்பத்தினரால் கீழக்கரையில் கொரோனா பரவிவிட்டதாகவும், இந்த குடும்பத்தினர் கீழக்கரை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் தங்கள் தந்தை கொரோனாவால் இறந்ததால் அரசின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டு தங்கள் குடும்பத்தினர் அனைவரும் தனித்து இருப்பதாகவும் பொதுமக்களுக்கு கொரோனா வைரசை பரப்பும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மறைந்த தொழிலதிபரின் மகள்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் ஒரே ஒரு குடும்பத்தினரால் கீழக்கரை முழுவதுமே பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது