உதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்!!!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தப் பாதிப்பினால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் தலைநகரான ஐத்ராபாத் முழுவதும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
எனவே மழையினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து கடிதம் ஒன்றையும் தமிழக முதல்வர் அம்மாநில முதல்வரான சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் “தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்வரான கே.சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். முன்னதாக அம்மாநிலத்தின் கவர்னராகப் பணியாற்றி வரும் தமிழிசை சௌந்திரராஜன் அவர்களும் தமிழக முதல்வரின் நிதியுதவிக்கு நன்றி தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Chief Minister Sri K. Chandrashekar Rao thanked @CMOTamilNadu Sri Palaniswami over the phone for extending financial help to the rain affected Telangana state. CM Sri KCR also thanked CM Sri Palaniswami for his generosity in extending material help besides the financial help.
— Telangana CMO (@TelanganaCMO) October 20, 2020