முருகதாசிடம் கெஞ்சினேன்: ராஜினாமாவிற்கு பின் பாக்யராஜ் விளக்கம்
- IndiaGlitz, [Friday,November 02 2018]
தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக போட்டியின்றி கடந்த ஆறு மாதத்திற்கு முன் பதவியேற்ற பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் சற்றுமுன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கு அவர் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சர்கார் படம் சம்பந்தமா சங்கத்திற்கு வந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதால் அவருக்கு நியாயம் வழங்கினேன். பொறுப்பில் இருக்கும் முக்கியமானவங்க எல்லோரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து நல்லபடியாக நியாயாமா அதை செயல்படுத்தவும் முடிந்தது.
ஆனால் இந்த விவகாரத்தால் பல அசவுகரியங்களை சந்தித்தேன். அதுக்கு முக்கிய காரணமாக நான் நினைக்கிறது தேர்தலில் நின்று தலைவர் பதவிக்கு வராமல் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வந்ததே என நினைக்கிறேன். எனவே எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறையா நின்று மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு தொடர்ந்து கடமையோட செயல்படுவேன்.
மேலும் தனக்கு நேர்ந்த அசவுகரியங்கள் என்ன, ஒழுங்கீனங்கள் என்ன என்பதை சங்க நலன் கருதியும் நற்பெயர் கருதியும் வெளியே சொல்ல விரும்பல. முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படவில்லை. இதனாலேயே பெரிய நிறுவனமான சன்பிக்சர்ஸ்ன் கதையை வெளியே சொல்ல நேர்ந்தது. எனினும் தவறை உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு கே.பாக்யராஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.