Download App

Kazhugu 2 Review

கழுகு 2: காதல், காமெடியுடன் கொஞ்சம் த்ரில்

கடந்த 2012ஆம் ஆண்டு கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் இயக்குனர் சத்யசிவா இயக்கிய 'கழுகு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அதே குழுவினர் இணைந்து அளித்துள்ள படம் தான் 'கழுகு2'. இந்த படம் முதல் பாகத்தை போலவே ரசிகர்களை கவர்ந்ததே என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

தேனியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்து வரும் கிருஷ்ணா, காளிவெங்கட் ஆகிய இருவரும், கொடைக்கானல் காட்டிற்கு வேட்டைக்காரர்களாக அழைத்து செல்லப்படுகின்றனர். காட்டில் வேலை செய்யும் தொழிலாளிகளை செந்நாய்களிடம் இருந்து பாதுகாப்பதுதான் இவர்களுடைய வேலை. துப்பாக்கி எப்படி பிடிப்பது என்றே தெரியாமல், பணத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்ளும் கிருஷ்ணா, வேலை பார்ப்பவர்களில் ஒருவராகிய பிந்துமாதவியை காதலிக்கின்றார். கிருஷ்ணா-பிந்துமாதவி காதலுக்கு பிந்துமாதவியின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த ஊரில் உள்ள எம்.எல்.ஏவிடம் ஒரு வெயிட்டான கொள்ளையடித்துவிட்டு பிந்துமாதவியுடன் அந்த காட்டில் இருந்து தப்பியோடி சந்தோஷமாக வாழ வேண்டும் என்று திட்டமிடுகிறார் கிருஷ்ணா. அந்த கொள்ளை திட்டமிட்டபடி நடந்ததா? பிந்துமாதவியை கைப்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை

ஆரம்ப காட்சிகளில் கிருஷ்ணா, காளிவெங்கட் உடன் சேர்ந்து காமெடியில் கலக்குகிறார். பிந்துமாதவியுடன் காதல் ஏற்பட்டவுடன் கொஞ்சம் சீரியஸ் ஆகிறார். ஆக்சன் காட்சியிலும் தேறிவிடுவதால், ஒரு ஹீரோவுக்குரிய அந்தஸ்தை தொடர்ந்து நிலைநிறுத்தி கொள்கிறார்.

பிந்துமாதவிக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். அவரும் அதனை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார். கிருஷ்ணா மீது கண்மூடித்தனமாக காதல் கொண்டு அவரை கவனிக்கும் விதத்தில் நடிப்பு ஓகே. லட்சக்கணக்கில் திருடிவிட்டு தன்னை அழைத்து கொண்டு செல்ல வந்த கிருஷ்ணாவிடம் அவர் பேசும் வசனம் கைதட்டல் பெறுகிறது.

காளிவெங்கட் படம் முழுவதும் வரும் ஹீரோவின் தோழன் கேரக்டர். ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றார். சில இடங்களில் கொஞ்சம் சீரியஸ் நடிப்பையும் தந்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை இவர் சரியாகவே செய்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கரை இயக்குனர் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். வில்லன் ஹரிஷ் பெராடி நடிப்பு ஓகே. ஒரே ஒரு குத்துப்பாட்டுக்கு பிக்பாஸ் புகழ் யாஷிகாவை பயன்படுத்தியுள்ளனர். 

யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. குறிப்பாக யுவன் குரலில் 'அடி ஏண்டி புள்ள' பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. அதேபோல் 'அசமஞ்சக்காரி' பாடலும் அருமை. ஆரம்ப காட்சியான செந்நாய் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் யுவன், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு அடர்ந்த காட்டில் நாமே பயணம் செல்வது போல் உள்ளது. 125 நிமிடத்தில் படத்தை முடித்த எடிட்டருக்கு ஒரு பாராட்டு

கழுகு' படத்தை இயக்கிய இயக்குனர் சத்யசிவா இந்த படத்தில் செந்நாய்க்கூட்டம், முதுமக்கள் தாழி, தங்கப்புதையல், ஹெலிகாப்டர் விபத்து மற்றும் கிருஷ்ணா-பிந்துமாதவி காதல் என ஐந்து விஷயங்களை கொடுத்துள்ளார். இந்த ஐந்துமே ஐந்து படங்களாக எடுக்க வேண்டிய அளவுக்கு வெயிட்டான விஷயம். ஆனால் இவை அனைத்தையும் ஒரே படத்தில் பயன்படுத்தி அனைத்திலும் நுனிப்புல் மேய்ந்துள்ளார். ஆரம்ப காட்சிகளான செந்நாய்க்காட்சிகள் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. ஆனால் அதன்பின்னர் கதையோட்டத்தை திசை திருப்பி தேவையில்லாத காட்சிகளுக்கு இயக்குனர் தாவிட்டார். இந்த செந்நாய் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் வைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இடைவேளை டுவிஸ்ட்டை சின்னக்குழந்தை கூட யூகித்துவிடும். கிளைமாக்ஸில் கடைசி பத்து நிமிடங்களில் சின்னச்சின்ன டுவிஸ்டுகள் வந்தாலும் அவை பார்வையாளர்கள் மனதை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பல காட்சிகளில் சுத்தமாக லாஜிக் இல்லை. குறிப்பாக காட்டில் ஒரு கூட்டமாக வேலை செய்பவர்களுக்கு டீ போடும் பிந்துமாதவி பல கிலோமீட்டர் தள்ளிச்சென்றா டீ போடுவார்? ஒரு அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போய்விட்டது என்றால் வெறும் இருபது போலீஸ் மட்டுமா காட்டிற்குள் வரும்? முதுமக்கள் தாழியை கண்டுபிடிக்கும் காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லை. 

இருப்பினும் எம்.எல்.ஏ வீட்டில் கிருஷ்ணா கொள்ளையடிக்கும் காட்சி சூப்பர். கிருஷ்ணா-காளிவெங்கட் காமெடி, மற்றும் பிந்துமாதவின் ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவை ஓகே. மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்களம் கிடைத்தும், ஒரே நேர்கோட்டில் கதையை கொண்டு செல்லாமல் பல்வேறு திசைகளில் இயக்குனர் திரும்பியுள்ளதால் எதையுமே முழு அளவில் ரசிக்க முடியவில்லை. கிருஷ்ணா, பிந்துமாதவி, காளிவெங்கட் ஆகியோர்களின் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்

Rating : 2.3 / 5.0