கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து: 100 பயணிகளின் கதி என்ன?
- IndiaGlitz, [Friday,December 27 2019]
கஜகஸ்தான் நாட்டில் 100 பேர்களுடன் சென்ற விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அலமட்டி என்ற நகரில் இருந்து விமானம் ஒன்று 100 பேர்களுடன் கிளம்பியது. அதில் 95 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் இருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி கீழே விழுந்தது
இந்த விபத்தில் விமானத்தில் பெரும் பகுதி சேதமடைந்தது என்றும், ஒருசில வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விமான விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளதாகவும் ஒரு சிலர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன
விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக் ஆப் ஆனபோது போதிய உயரம் எழும்பாததால் கான்க்ரீட் வேலியில் மோதி அதன் பின்னர் அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து கஜகஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது