வெள்ளக்காடான வட இந்தியா? கவிதை வடித்து வருத்தம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த வட இந்திய மாநிலங்களும் வெள்ளத்தால் தத்தளித்துவரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து இந்தச் சம்பவத்தை உலக நாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி கவிதை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாவலாசிரியர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்று பன்முக அடையாளங்களோடு பிரபலமாக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் பாடலாசிரியர் என்ற முறையில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இந்நிலையில் வடஇந்தியாவில் தற்போது பெய்துவரும் கனமழை குறித்து தனக்கே உரிய பாணியில் கவிதை வடித்திருக்கிறார். அதில்,

இமாசலப் பிரதேசத்தின்

மழைப் படையெடுப்பில்

மலை வீழ்கிறது

அந்த வெள்ளத்தில்

மழையே மூழ்கிவிட்டது

என்ற கவிதை காட்சியாவது

கவலை தருகிறது

தீவிர மீட்சி தேவை

புவி வெப்பம் என்பது

பூமிபிளக்கும் வறட்சியும் தரும்

விலாவறுக்கும் வெள்ளமும் தரும்

உலகநாடுகளின் கவனத்திற்கு…

எனக் குறிப்பிட்டு இருக்கும் இவருடைய வரிகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கின்றன.

வட இந்தியாவில் இயல்பு நிலையைத் தாண்டி கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் மலைச்சரிவு, நிலச்சரிவு சம்பவங்கள் நடைபெற்று பல நூறு வீடுகளும் கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இதுகுறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதாகவும் இதனால் ஹரியானா மாநிலத்திலுள்ள ஹத்னிகுண்டு தடுப்பணை திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பத்தால் தலைநகர் டெல்லி முழுக்கவே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

வடஇந்தியாவில் பெய்துவரும் கன மழை காரணமாக டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், ஹரியாணா மாநிலங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.