பள்ளிக்காதல் படத்திற்கு 'U' சான்றிதழ்? 'மறக்க முடியுமா' படம் குறித்து கவிஞர் தாமரை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பள்ளி குழந்தைகள் காதல் செய்யும் திரைப்படங்கள் என்றால் 'U' சான்றிதழ் தணிக்கையில் தர மாட்டார்கள். இந்த நிலையில் விஜய் டிவி ரக்சன் நடித்த ’மறக்க முடியுமா’ என்ற திரைப்படத்தின் டிரைலருக்கு 'UA' சான்றிதழ் அளித்த நிலையில் படத்திற்கு 'U' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களை தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகி உள்ளது. வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் கண்டு மகிழலாம்
படத்தின் காட்சி துண்டுகளை பார்த்தால் பள்ளிக்காதலாக இருக்குமோ என்று தோன்றும். பள்ளிக்காதல் தான் ஆனால் பள்ளிக் குழந்தைகளை கெடுக்கும் காதல் இல்லை ! உங்களுக்குத் தெரியுமா, பள்ளிக்குழந்தைகளின் காதல் படங்களுக்கு தணிக்கைத்துறை 'U' தர மாட்டார்கள்.
இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. படத்தின் முன்னோட்ட துண்டுக்கு தணிக்கை இதே காரணத்துக்காக (பள்ளிக்காதல்) 'U/A' என்றே சான்றிதழளித்துள்ளது. இறுதி தணிக்கைக்குப் போனபோது, படத்தின் நோக்கம், நாகரிகம் குலையாத காட்சிகள், எல்லோரும் பார்க்கும்படியான அமைப்பு ஆகியவற்றைப் பார்த்து வியந்து, 'U அளித்துள்ளார்கள்
மேலும், இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பாக எழுத வேண்டிய மற்றொரு காரணம் எனக்குள்ளது. படத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல், மலினமான(விடலை) நகைச்சுவை உள்ளிட்ட கசப்புகள் கிடையாது.
ஆரம்பத்தில், இயக்குநர் யோகேந்திரன் என்னிடம் கதை சொல்லி முடித்த போது புகை/மது காட்சிகள் இருந்தன. அவரிடம் நான் கேட்டது இதுதான் : ''ஏன் தம்பி, இவையெல்லாம் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா ? சமூகம் ஏற்கனவே இவ்வகைப் போதைகளால் சீர்கெட்டுக் கிடக்கிறது. நாம் அவற்றைத் தரையில் வேறு காட்டித் தூக்கிப் பிடிக்க (glorify) வேண்டுமா?
நாம் விரும்பும் சீர்திருத்தங்களை நம் படத்தில் கூட செய்ய முடியவில்லை என்றால் வேறு யார் படத்தில் செய்யப் போகிறோம் ?" என்பதை விளங்கிக் கொண்டு படத்தில் இருந்த அத்தகைய காட்சிகளை (படக்குழுவினரின் எதிர்ப்பையும் மீறி) நீக்கி விட்டார். இன்று தணிக்கைக்குழு கைதட்டி பாராட்டு தெரிவித்து 'யூ' வழங்கிய போது, குழுவினர் அனைவரும் மகிழ்ந்தனர்.
இத்தகைய முடிவை செயல்படுத்த உறுதுணையாக இருந்தவர் தயாரிப்பாளர் இரகு அவர்கள். அவருக்குதான் முதல் பாராட்டும் நன்றியும் உரித்தாக வேண்டும். என்னையும் யோகுவையும் எங்கள் சமூக சிந்தனைகளையும் நன்கறிந்திருந்த அவர் கதையிலாகட்டும், பாடல்களிலாகட்டும், காட்சிகளிலாகட்டும் - முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.
அதேபோல், மற்றுமொரு நிகழ்வு : இன்று வரும் தமிழ் படங்களின் தலைப்புகளை பாருங்கள்...ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம். இந்தப் படத்தின் தலைப்பும் முதலில் ஆங்கிலத்தில் தான் இருந்தது. அதையும் மறுத்துக்கூறி 'மறக்குமா நெஞ்சம்' என்றொரு தலைப்பையும் கொடுத்தேன். தமிழ் 'மெல்லச் செத்துவரும்' இச்சூழ்நிலையில் அதைக் காப்பாற்றும் பொறுப்பு தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
நம் எல்லோரிடமும், சமூக சீரழிவுகள் குறித்து ஒரு புலம்பல் உள்ளது. ஆனால் அவற்றை எப்படி மாற்றுவது, எங்கே தொடங்குவது என்று யாரும் யோசிப்பதில்லை. மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கலாமே, அதை யார் தடுப்பது ? நம்மால் முடிந்ததைக்கூட நாம் செய்யாமல், சமூக நிலையைக் குறித்து குற்றம் சாட்டி என்ன பயன் ?
இந்தப் படத்தில் பங்குபெற்று நான்கு பாடல்கள் எழுதியதில் எனக்குப் பெருமை ! ஒத்த சிந்தனை உடையவர்களாக இருந்ததால், யோகு, இரகு ஆகியோர் குடும்ப நண்பர்களாகி போனது வரவு ! அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்றவிருக்கிறோம் !
பிப்ரவரி 2 இல் வெளியாகவிருக்கும் படத்தைப் பாருங்கள். வேறெதற்காக இல்லாவிட்டாலும் குழுவின் சமூக நோக்கத்திற்காகவாவது பாராட்டை நல்குங்கள். அது மற்றவர்களுக்கும் நல்ல படங்களைக் கொடுக்க ஊக்கம் தரும்.
இவ்வாறு கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments