கே.வி.ஆனந்தின் 'கவண்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Sunday,March 12 2017]

கோ, அயன், மாற்றான், அனேகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'கவண்'. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டிரைலரின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படம் போலவே இந்த படமும் மீடியாவை பற்றிய படமாக இருந்தாலும் மீடியாவின் இன்னொரு முகத்தை காட்டும் வித்தியாசமான படம் என்பதை டிரைலரில் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ள வசனமான 'மீடியாவால எத்தனையோ மாற்றங்கள், விழிப்புணர்வுகள் கிடைச்சிருக்கும், ஆனா அதே மீடியாவால இன்னொரு பக்கத்தை நினைச்சு பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு' என்ற வசனம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

சமூக வலைத்தளங்கள் உட்கார்ந்து பக்கம் பக்கமாக கருத்து சொல்வதில் பிரயோஜனமில்லை, அரசியல்வாதிகள் உணரும் வகையில் போராட்டத்தில் நேரடியாக இறங்க வேண்டும் என்கிற வசனம் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டத்தை நினைவுகூறுகிறது.

விஜய்சேதுபதியின் வித்தியாசமான கெட்டப் மற்றும் நடிப்பு, டி.ராஜேந்தரின் வழக்கமான சரவெடி, விக்ராந்த்தின் ஆக்ரோஷமான நடிப்பு, மடோனாவின் அழகு மற்றும் செண்டிமெண்ட், வில்லனின் கொடூர பார்வை என இரண்டு நிமிட டிரைலர் படத்தை முழுவதுமாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டைக்காட்சிகள், அந்தோணியின் கச்சிதமான எடிட்டிங், ஒரு அரசியல் படத்திற்கு தேவையான சரியான அளவில் ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை என கச்சிதமாக வேலை செய்துள்ள டீம், ஒரு சிறந்த படத்தை உருவாக்கியுள்ளது என்பது டிரைலரில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பிரபல எழுத்தாளர்களான சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர்களுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த 'கவண்' படத்தின் நிச்சய வெற்றி இந்த டிரைலரில் 100% தெரிகிறது.