Download App

Kavan Review

இயக்குனர் கே வி ஆனந்தும் எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து இதுவரை சமுதாய பிரச்சினைகளை எடுத்து அதற்கு தேவையான விறுவிறுப்பு கலந்த கமர்ஷியல் முலாம் பூசி வெற்றி கண்டுள்ளனர். இம்முறை இள ரத்தம் கபிலன் வைரமுத்துவை திரைக்கதைக்கு சேர்த்து நிகழ்காலத்தின் அசாத்திய  நடிகன் விஜய் சேதுபதி மற்றும் அஷ்டாவதானி டி ராஜேந்தர் துணை கொண்டு திரை மறைவில்  தொலைக்காட்சிகளின்  அதிர்ச்சியூட்டும் செயல்பாடுகளை  தோலுரித்து  காட்டியதில் சபாஷ் பெறுகின்றனr.

திலக் (விஜய் சேதுபதி ) ஒரு ஊடக மாணவர். தன்னுடைய காதலி மலரை  (மடோனா செபாஸ்டியன்) பிரிந்து மூன்று வருடங்கள் முடங்கி கிடந்தது பின் வேலை நேர்காணலுக்காக ஒரு தொலைக்காட்சி  அலுவலகத்துக்கு செல்ல அங்கே கரடு முரடான அரசியல்வாதி தீரன் (போஸ் வெங்கட்) போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொது சேனல் அதிபர் (ஆகாஷ் தீப்) சூழ்ச்சியால் நடக்கும் கலவரத்தை செல்போனில் பதிவு செய்ய, அதுவே அவருக்கு வேலை கிடைக்க உதவுகிறது.  உள்ளே இன்ப அதிர்ச்சியாக காதலி மலரும் இருக்க குஷியாகிறார்.  இந்நிலையில் அப்துல் (விக்ராந்த்) மற்றும் அவரது காதலி அரசியல்வாதியின் ஆலையிலிருந்து வரும் கழிவால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களுக்காக போராட காதலி அரசியல்வாதியின் ஆட்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.  விஜய் சேதுபதி மற்றும் மடோனா அப்பெண்ணின் முகத்தை மறைத்துப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகின்றனர்.  பின்னர் அதே பேட்டியின் காட்சிகளை மாற்றியமைத்து சேனல் கோல்மால் செய்ய கொதித்தெழும் விஜய் சேதுபதிக்கு போஸ் வெண்கட்டை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அமைகிறது.  பேட்டியில் சேனல் எழுதி கொடுக்கும் கேள்விகளை தவிர்த்து போஸ் வெங்கட்டின் முகத்திரையை விஜய் சேதுபதி கிழிக்க அவர் தாக்கபட்டு வேலையையும் தன் சகாக்களுடன் இழக்கிறார்.  உப்புமா சேனல் நடத்தும் டி ராஜேந்தர் அடைக்கலம் கொடுக்க பின் எப்படி இந்த சாதாரண மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு கவணாக மாறி சர்வ வல்லமை பொருந்திய எதிரிகளை வீழ்த்தினார்கள் என்பதே மீதிக் கதை.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த  அரிய பொக்கிஷம் விஜய் சேதுபதி என்றே சொல்லவேண்டும்.  ஆரம்பத்தில் (சற்று உறுத்தும்) விக்குடன் மாணவனாக வந்து மடோனாவிடம் கொஞ்சி, சாந்தினியிடம் சல்லாபித்து ஜாலி பையனாகவே இருந்து திடீரென கோட்டுடன் ஒரு நேர்காணல் ஒருங்கிணைப்பாளராக மாறி நக்கலும் நய்யாண்டியும் கொப்பளிக்க அரசியல்வாதியை வறுத்தெடுப்பதும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வில்லன் ஆகாஷிடம் அரங்கம் அதிரும் மாஸ் காட்டியும் தன் திறமையை நிரூபிக்கிறார்.  மற்றவர்கள் ஸ்கோர் செய்ய வேண்டிய காட்சிகளில் (எந்த ஹீரோவும் லேசில் ஒத்துக்கொள்ளாத அளவுக்கு) அடக்கி வாசித்து அதிலும் ஜெயிக்கிறார்.  டி ராஜேந்தர் தன் ஒரிஜினல் பாணியிலேயே வந்து ஆடுகிறார், பாடுகிறார், அடுக்கு வசனம் பேசுகிறார், அழவும் வைக்கிறார். ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.  மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து செல்கிறார், சில இடங்களில் டப்பிங் சத்தம் அதிகம்.  போராட்டக்கார அப்துலாக விக்ராந்த் ஜொலிக்கிறார்.  நீண்ட வசனத்தை பேசும் காட்சியில் தன் ’கத்தி’ அண்ணனுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார்.  பாண்டியராஜன் கச்சிதம், போஸ் வெங்கட் அசத்தல், வில்லன் ஆகாஷ் தீப்பும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்துகிறார்.  ஜெகன் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார், ஒரு காட்சியில் தலை காட்டும் பவர் ஸ்டாரும் முதல் முறையாக நெகிழ வைக்கிறார். மற்ற எல்லா நடிகர்களும் கச்சிதம்.

முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன என்பதை பாமரனுக்கும் புரிய கூடிய வகையில் பதியவைத்து பின் எப்படி ஒரு நடன நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல் வரை நாம் சின்ன திரையில் பார்க்கும் அத்தனையுமே உண்மைத்தன்மையின்றி ஒளிபரப்ப படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டும்படி இருக்கின்றன.  ஒரு சேனல் அதிபர் நினைத்தால் ஒரு அரசியல் வாதியின் பிம்பத்தையே மாற்ற முடியும் என்ற காட்சிகள் நம் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஏன் தனி தனி சேனல்கள் வைக்க போட்டா போட்டி போடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம்.  படத்தின் கதாநாயகர்கள் வழக்கம் போல் வில்லனை எதிர்த்து பறந்து பறந்து சண்டை போடாமல் அவர்கள் பாணியிலேயே சதி செய்து வீழ்த்துவது புதுமை.  ஆழமான வசனங்கள் அதை கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவரவர் பாணியில் பேசப்படும் போது வீரியம் கூடுகிறது.

முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் பாதியாக குறைவது சறுக்கல்.  அதே போல இரண்டாம் பாதி முழுக்கவே ஒரே விஷயத்தின் அடிப்படையில் நகரும் காட்சிக்கோர்வை என்பதால் சற்று அலுப்பு ஏற்படுவது நிஜம். சேனல் முதலாளியையும் அரசியல் தலைவரையும் மிக பலசாலிகளாக காட்டிவிட்டு கடைசியில் அவர்கள் சாதாரண நம் கதாநாயகர்களிடம் வெறும் உறுமலுடன் அடங்கி போவது காதில் பூ.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை படத்துக்கு பலம் அவரின் எந்த பாடலுக்கும் தியேட்டரில் யாரும் தம்மடிக்க செலவில்லை. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு நல்ல வரவேற்பு.  அபிநந்தன் ராமானுஜத்தின் காமிராவும் அந்தோணியின் எடிட்டிங்கும் சிறப்பான பங்களிப்பை தர கதை திரைக்கதை எழுதி இருக்கும் சுபா,  கபிலன் மற்றும் கே வி ஆனந்த் நன்கு ஆராய்ச்சி செய்து வடிவமைத்ததில்  நம்பத்தன்மை அதிகம்.  வசனங்கள் அபாரம்.  கே வி ஆனந்த் தன்னுடைய பாணியிலேயே படத்தை தந்து இருந்தாலும் இதில் சொல்ல வந்த கதையை மிக அழுத்தமாக பதியவைத்ததில் சபாஷ் சொல்ல வைக்கிறார்.

சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்  நுட்பம் துணையோடு  எடுத்து கொண்ட கருத்தை ஆழமாக பதியவைத்து பெருமளவு  பொழுது போக்குக்கும் குறை வைக்காத இந்த கவணை தாராளமாக கண்டு மகிழலாம்

Rating : 3.5 / 5.0