100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள்...! அதுவும் முன்னாள் முதல்வரின் சொந்த கிராமமாம்...!
- IndiaGlitz, [Monday,June 28 2021]
தமிழகத்தில் காட்டூர் என்ற கிராமம் தான் முதன்முதலாக 100% தடுப்பூசி என்ற இலக்கை எட்டியுள்ளது.
கொரோனாவின் 2-ஆம் அலை தீவிரமாக பரவி வந்ததால், அரசு தமிழகம் முழுவதும் ஊரடங்கை பிறப்பித்திருந்தது. இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்ற மே மாதம் 36 ஆயிரமாக இருந்த தொற்று தற்போது, ஐந்தாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 3-ஆம் அலை வராமல் தடுக்க மக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர். மக்களிடம் வேக்சின் குறித்த பயமும் குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் என்ற கிராமம் தான் 100% தடுப்பூசி என்ற இலக்கை முதலில் நிறைவேற்றியுள்ளது. இங்கு தகுதியுள்ள அனைத்து நபர்களும், தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ போட்டுள்ளார்கள். இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,332 -ஆக இருக்கும்பட்சத்தில், 18 வயதுக்குக் குறைவானவர், கர்ப்பிணிகள் மற்றும் பிற உடல்நலக்குறைபாடுகளால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களைத் தவிர 2,334 நபர்கள் மீதமுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு டோஸ் வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளை திருவாரூர் தொகுதி, திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முன்னெடுத்து செய்து வருகிறார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். தமிழகத்தில் பலரும் வேக்சின் செலுத்த அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில், பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னணி கிராமமாக இந்த ஊர் உருவெடுத்துள்ளது. இங்குள்ள பக்கத்து கிராம மக்களும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இந்த ஊரின் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் தாயாரின் சொந்த கிராமமும் இதானாம். இங்கு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தற்போது நினைவிடமும் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த வேக்சின் ஒன்றுதான் முக்கிய ஆயுதமாக உள்ளது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.