'கத்துக்குட்டி' இயக்குநருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இரா.சரவணன் இயக்கிய 'கத்துக்குட்டி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா நடத்தி கௌரவித்துள்ளது.
தஞ்சை டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில், இரா சரவணனின் 'கத்துக்குட்டி' படம் அப்பகுதி மக்களின் விழிப்புணர்வை தூண்டியது. அதுமட்டுமின்றி இந்த படம் வெளிவந்த நான்காவது நாள், மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுவே 'கத்துக்குட்டி' படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் 'கத்துக்குட்டி' பட இயக்குநர் இரா.சரவணனை 'மண்ணின் இயக்குநர்' என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கௌரவித்து பாராட்டு விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் ஏராளமான விவசாயிகளும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில், இயக்குநரின் சொந்த ஊரான புனல்வாசல் கிராமத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் இரா.சரவணன், ''நான் ஒரு விவசாயக் கூலியின் மகன். விவசாயக் கூலி வேலைகளைச் செய்துதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். என்னுடைய முதல் படைப்பு மண்ணுக்கான படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விவசாய மக்களின் ஆத்ம குரலாகவே 'கத்துக்குட்டி' படத்தை இயக்கினேன். விவசாயத்தைக் கதைக் களமாக வைத்துப் படம் எடுப்பது இன்றைய காலகட்டத்தில் சிரமமானது. என் தயாரிப்பாளர்கள்தான் இதனைச் சாத்தியமாக்கினார்கள். மிக இக்கட்டான நேரத்தில் இந்தப் படத்தை வெளிக்கொண்டு வர சுந்தரபரிபூரணன் என்கிற ஒரு விவசாய ஆர்வலர்தான் உதவினார். இங்கே கிடைக்கும் கைத்தட்டல்கள் அனைத்தும் அவரைத்தான் போய்ச் சேர வேண்டும். நிறைய காயங்களோடு இருக்கும் எனக்கு விவசாய மக்கள் எடுத்திருக்கும் விழா ஆறுதலாக இருக்கிறது. 'கத்துக்குட்டி' படத்துக்கு கிடைத்திருக்கும் மரியாதை, நல்ல படைப்புகளை மென்மேலும் கொடுக்க வைக்கும்!" என்றார்.
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பது மட்டுமின்றி மக்களின் விழிப்புணர்வையும் தூண்டும் வகையில் அவ்வப்போது அமைந்து வருகிறது என்பதற்கு 'கத்துக்குட்டி' படம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments