Download App

Kaththi Sandai Review

காமடி, கிளாமர், ஆக்‌ஷன் ஆகியவற்றின் சரியான கலவையில் கமர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களைத் தருபவர் என்ற பெயர் பெற்ற இயக்குனர் சுராஜ், நடிகர் விஷாலுடன் முதல் முறையாகவும், வைகைப்புயல் வடிவேலுவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி சண்டை’. விஷால் ஜோடியாக தமன்னா நடித்திருப்பதும் படத்தின் மீதான ஈர்ப்பு உருவாக ஒரு காரணம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம் அவற்றை நிறைவேற்றியதா என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்வோம்.

சென்னைக்கு வரும் அர்ஜுன் ராமகிருஷ்ணன் (விஷால்) லோக்கல் காமடி ரவுடி தேவா (சூரி) மற்றும் அவனது அடியாட்கள் உதவியுடன் திவ்யா (தமன்னா) என்ற பணக்காரப் பெண்ணின் காதலை வெல்கிறான்.

திவ்யாவின அண்ணன் தமிழ்ச் செல்வன் (ஜெகபதி பாபு) ஒரு போலீஸ் உயர் அதிகாரி, அர்ஜுனுக்கு சில சோதனைகளை வைத்துவிட்டு தன் தங்கையின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறான். அர்ஜுன் அவர்களது குடும்பத்தில் ஒருவனாகிறான்.
அதன் பிறகுதான், அர்ஜுன் தன் வீட்டுக்குள் நுழைந்தது திவ்யாவின் மீதான காதலுக்காக அல்ல என்றும்  தான் ஒரு குற்றவாளியிடமிருந்து (தருண் அரோரா) திருட்டுத்தனமாக பதுக்கிவைத்திருக்கும் பெரும் பணம்தான் அர்ஜுனின் குறிக்கோள் என்றும் தெரிந்துகொள்கிறான் தமிழ்ச் செல்வன்.

உண்மையில் அர்ஜுன் யார்? அவனது பின்னணியும் நோக்கமும் என்ன? நாயகனின் நோக்கம் வென்றதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது மீதிக் கதை.

முதல் பாதியில் காவல்துறை தடுப்புகளை அடித்து நொறுக்கிவிட்டு சீறிப் பாயும் கண்டெய்னர் வண்டியை ஒரு போலீஸ் அதிகாரி துரத்திப் பிடிக்கும் காட்சி, ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலைத் தூண்டிவிடுகிறது. ஆனால் உடனடியாக திரைக்கதை காமடி மற்றும் காதலுக்கு நகர்ந்துவிடுகிறது .

முதல் பாதியில் சூரியின் காமடி மற்றும் விஷாலின் காதல் முயற்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சூரியின் காமடி ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் போதுமான அளவு எடுபடவில்லை. காதல் காட்சிகளில் புதிதாக ஒண்றும் இல்லை என்றால் விஷால்-தமன்னா ஜோடி திரையில் புதுமையாகவும் அழகாகவும் இருப்பதால் அவற்றை பார்க்க முடிகிறது.

இடைவேளையை நெருங்குகையில் திரைக்கதை சூடு பிடிக்கிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு எதிர்பாரா திருப்பங்கள் ஆச்சரியப்படுத்தி இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கின்றன.

இரண்டாம் பாதியில் பெருமளவில் காமடியும் ஆக்‌ஷனும் மாறி மாறி வருகின்றன.  வைகைப்புயல் வடிவேலு உபயத்தில் காமடிக் காட்சிகள் சிரிக்கும்படி இருக்கின்றன. அக்‌ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை துளிக்கூட இல்லை என்றாலும் இது ஒரு மாஸ் ஹீரோ படம் என்ற வகையில் அதைப் பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தேவையான உடல்வாகும் உழைப்பும் லாவகமும் விஷாலிடம் இருப்பதால் அவை ஓரளவு ரசிக்க வைக்கின்றன.

படத்தின் கடைசி 20 நிமிடங்களில் நாயகன் குறித்த மர்மங்கள் விலகுகின்றன. இந்தக் காட்சிகளில ஊழல் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட ஒரு கிராமத்தின் அவல நிலையும் அதை எதிர்த்து அவர்கள் கொதித்து எழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில நல்ல சமூக கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்த எமோஷனல் காட்சிகள் நடுவயது ரசிகர்களையும் இவற்றில் பேசப்படும் அரசியல் சார்ந்த வசனங்கள் இளைஞர்களையும் ஈர்க்கக்கூடும்.

இடைவேளையில் வரும் திருப்பங்களைத் தவிர சுவாரஸ்யமான. காட்சிகளுக்கோ என்று ஆச்சரியமடைய வைக்கும்
தருணங்களுக்கோ படத்தில் இடமே இல்லை என்பதுதான் ஆகப் பெரிய குறை. எமோஷனல் காட்சிகள் நிறைந்த இறுதிப் பகுதியும் அவற்றில் புதிதாக எதுவும் இல்லாததால் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. இவற்றுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்திருக்கலாம்.

விஷால் வழக்கம்போல் சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார். காமடிக் காட்சிகளில் காமடியன்களுக்கு தக்க துணை புரிகிறார். எமோஷனல் நடிப்பிலும் கரையேறுகிறார். தமன்னா அழகாக இருப்பதோடு பாடல்களில் கவர்ச்சியைத் தூவுகிறார். நடிப்புக்கு பெரிய வேலை இல்லை. சூரி காமடி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காமடியன் வேடத்தில் நடித்திருக்கும் வடிவேலுவுக்கு இது நல்ல மறுவரவு. சுராஜுடன் இவரது முந்தைய படங்களான ’தலைநகரம்’, ’மருதமலை’ அளவுக்கு காமடி டிராக் சிறப்பாக அமையவில்லை. ஆனால் வடிவேலு தன் தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியின் மூலமும். ஆர்த்தி, பாலாஜி ஆகியோர் துணையுடனும் காமடிக் காட்சிகளில் பல இடங்களில் சிரிக்க வைத்துவிடுகிறார்.

ஜெகபதி பாபு காவல்துறை அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது நடிப்புத் திறனைக் காட்ட இன்னும் அதிக வாய்ப்பளித்திருக்கலாம். தருண் அரோரா வில்லனாக தோற்றத்தில் மிரட்டுகிறார். ஆனால் வசன உச்சரிப்பு (டப்பிங்) மகா சொதப்பல். ஜெயபிரகாஷ் இரண்டே காட்சிகளில் வந்தாலும் வழக்கம்போல் நன்றாகச் செய்துவிட்டுச் செல்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அவை படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருப்பதால் ரசித்துப் பார்க்க முடிகிறது. பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவில் சிறப்பான லைட்டிங்குடன் காட்சிகள் செழிப்பாக உள்ளன. சேஸிங் காட்சிகளைக் கண்களை உறுத்தாத வகையில் படம்பிடித்திருக்கிறார்.

படத்தின் முதல் காட்சியிலும் இடைவேளைக்குப் பிறகும் வரும் சேசிங் காட்சிகளுக்காக சண்டைப் பயிற்சிக் குழுவைப் பாராட்ட வேண்டும். குறிப்பாக இரண்டாவது சேசிங் காட்சி புதி டெக்னிக்குகளுடன், குறுகிய இடத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வடிவேலுவின் காமடி, விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவற்றால் பெருமளவில் காப்பாற்றப்பட்டு ஒரு பொழுதுபோக்குப் படம் என்ற அளவில் தேறுகிறது ‘கத்தி சண்டை’.

Rating : 2.5 / 5.0