வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக துரைமுருகன் மகன் சென்னை ஐகோர்ட்டில் மனு
- IndiaGlitz, [Monday,April 01 2019]
வேலூர் மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துரைமுருகன் வீட்டிலும், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் அள்ளிச்சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் துரைமுருகன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரிச்சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது சிமெண்ட் குடோன் ஒன்றில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாகவும், இந்த பணம் துரைமுருகனுக்கு சொந்தமானதா? என்று விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதியின் வேட்பாளமான கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளார். வருமான வரிச்சோதனை காரணமாக தேர்தல் பணிகளை தங்களால் செய்ய முடியவில்லை என்றும், எனவே வருமான வரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.