கதாநாயகன் - கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கலாம்
கடந்த ஆண்டு 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால், தயாரித்து நடித்திருக்கும் இரண்டாவது படம் 'கதாநாயகன்'. அறிமுக இயக்குனர் முருகானந்தம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் விஷ்ணு விஷாலின் முதல் தயாரிப்பைப் போலவே ஒரு நகைச்சுவைப் படமாக விளம்பரப்படுத்தப்பட்டது. முந்தைய படத்தைப் போல் இது நம்மை சிரித்து ரசிக்க வைப்பதில் சாதிக்கிறதா அல்லது நம் பொறுமையை சோதிக்கிறதா என்பதை விமர்சனத்தில் காண்போம்.
தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தம்பிதுரை (விஷ்ணு விஷால்) ஒரு சாலையைக் கடப்பதற்குக் கூட பயப்படுபவன். ஒரு நாள் அவனுக்கு லிஃப்ட் கொடுக்கும் கண்மணியைக் (கேத்ரீன் தெரசா) கண்டதும் காதல்வயப்படுகிறான். தம்பிதுரையுடன் ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும் அவனது பள்ளிக்கால நண்பன் அண்ணாதுரை (சூரி) காதலில் வெல்ல அவனுக்கு உதவுகிறான்.
கண்மணியின் அப்பா (நட்ராஜ்) ஒரு ரவுடியால் (அருள்தாஸ்) நடு ரோட்டில் தாக்கப்படுகிறார். அப்போது அங்குவரும் தம்பிதுரை அவனைத் தட்டிக்கேட்காமல் பயத்தில் தப்பி ஓடுகிறான். இதனால் ஒரு கோழைக்குப் பெண் கொடுக்க மாட்டேன் என்று கண்மணியின் அப்பா அவனை நிராகரித்துவிடுகிறார்.
இதனால் விரக்தியடையும் தம்பிதுரை ஒரு பாரில் குடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் அந்த ரவுடியையும் அவனது அடியாட்களையும் . அடித்து துவைத்துவிடுகிறான். இதனால் ஏற்படும் சிக்கல் போதாதென்று ஒரு மருத்துவமனையில் நிகழும் தவறு ஒன்றால் தம்பிதுரை இன்னும் 10 நாட்களில் இறந்துவிடுவான் என்று தவறாக சொல்லப்படுகிறது. இதை நம்பி அவன் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவனை ஒரு பணபலமும் அடியாள் பலமும் மிக்க துபாய் ஷேக் (ஆனந்த்ராஜ்) இடம் சிக்க வைக்கின்றன.
தம்பிதுரை ரவுடியிடமிருந்தும் ஷேக்கிடமிருந்து தப்பி தன் காதலியைக் கைபிடித்தானா இல்லையா என்பதே மீதிக் கதை.
வயிறுகுலுங்க சிரிக்கவைக்கு நோக்கில் படம் எடுத்திருக்கிறார்கள். இடையிடையே மரணம் பற்றிய ஓஷோ தத்துவங்கள், எது உண்மையான தைரியம் என்ற விவாதம், தாய்ப் பாசம் போன்ற சீரியசான விஷயங்களையும் சேர்த்திருக்கிறார்கள். இரண்டுமே பெரிய அளவுக்குத் திருப்திதரவில்லை. முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு கொண்டுவருவதற்கு தேவைக்கதிகமான காட்சிகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. காமடியும் மிகக் குறைவாகவே உள்ளது. சீரியஸ் காட்சிகளிலும் போதுமான அழுத்தம் இல்லை.
இரண்டாம் பாதியில் ஓஷோ தத்துவம் பேசும் டாக்டராக விஜய் சேதுபதியின் கெளரவத் தோற்றம், துபாய் ஷேக்காக ஆனந்த் ராஜ் ஆகியோரால் கலகலப்பு கூடுகிறது. கடைசி 15 நிமிடங்களில் மொட்டை ராஜேந்திரனும் லைட் மியுசிக் பாடகராக வந்து அதகளம் செய்கிறார். எனவே முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி நகைச்சுவை படம் என்ற அளவில் ஓரளவு திருப்தி தருவதாக உள்ளது. கிளைமேக்ஸ் காட்சிய் மொட்டை ராஜேந்திரன் - சூரி புண்ணியத்தில் திரையரங்கைவிட்டு வெளியேறும்போது சிரிப்புடன் வெளியேற முடிகிறது. '7ஜி ரெயின்போ காலனி', 'காதலுக்கு மரியாதை', 'மெட்ராஸ்' போன்ற வெற்றிப் படங்களின் காட்சிகளை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியிருக்கும் விதம் ரசிக்கவைக்கிறது.
திரைக்கதை சரியாக அமைத்திருந்தால் ஒரு முழுமையான திருப்திதரும் நகைச்சுவைப் படமாக அமைந்திருக்கும்.
விஷ்ணு விஷால் வழக்கம்போல் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாகத் தருகிறார். இன்னும் சில நாட்களில் மரணமடைந்துவிடுவோம் என்று தெரிந்தவுடன் ஏற்படும் துக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நடனம், சண்டைக் காட்சிகளிலும் குறைசொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. கேத்ரீன் தெரசா அழகாகவும் கிளாமராகவும் இருக்கிறார். நாயகனின் அம்மாவாக சரண்யா பொன்வண்னன். நாயகியின் அப்பாவாக நட்ராஜ் ஆகியோர் நன்கு நடித்துள்ளனர், சூரி, அருள்தாஸ், ஆனந்த்ராஜ், ’கெளரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நகைச்சுவைக்கு நன்கு பங்களித்திருக்கின்றனர். குறிப்பாக அண்மைக் காலப் படங்களில் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பை சிறப்பாகத் தந்து வரும் ஆனந்த்ராஜ் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை.
ஷான் ரோல்டன் இசையமைத்த பாடல்களில் அவரும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ள 'உன் நெனப்பு', 'டப்பு டிப்பு' ஆகிய பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்கள் கதைக்குத் தேவையான பங்களிப்பை சரியாகத் தந்துள்ளன.
மொத்தத்தில் 'கதாநாயகன்' படத்தை ஒரு சுமாரான நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம் என்று வகைப்படுத்தலாம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமே என்ற வருத்தத்துடன்.
Comments