ஐபில் போட்டிக்கு எதிராக போராடிய தமிழர்கள் எங்கே? கஸ்தூரி கேள்வி
- IndiaGlitz, [Saturday,March 23 2019]
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது தமிழர் நல விரும்பிகள் என்ற பெயரில் ஒருசில கட்சி தலைவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர். காவேரி பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாட்டு தேவையா? என்று போராட்டக்காரர்கள் எழுப்பிய குரல் காரணமாக அதன்பின்னர் திட்டமிட்டிருந்த சென்னை போட்டிகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு இன்று சென்னையில் நடைபெறும் போட்டிக்கு எதிராக எந்த குரலும் இல்லை. அதிலும் காவிரியில் தண்ணீர் தரமாட்டோம் என்று கூறிய கர்நாடக அணியுடன் இன்று போட்டி நடைபெறவுள்ளது. காவிரி பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்துவிட்டாலும் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பல பிரச்சனைகளுக்காக கிரிக்கெட் போட்டியை எதிர்த்து போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் தற்போது அமைதியாகியுள்ளனர்.
இதனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வியாக எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ?
கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் 'தேர்தல் களம் அருகில் உள்ளதால் விளையாட்டு கள கவன ஈர்ப்பு தேவை இல்லை என்றும், உங்களை போல் சமூக வலைத்தளங்களில் தூண்டி விடுபவர்கள் நிஜ களத்தில் வருவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.
நிஜமான(தேர்தல்) களம் அருகில் உள்ளது ..! விளையாட்டு களம் கவனயீர்ப்புக்கு இப்ப தேவை இல்லை என்று அர்த்தம் ..!
— Karthik (@karthi_unique) March 23, 2019
உங்களை போன்ற தூண்டிவிடக்கூடிய சமூக ஆர்வலர்களை சமூக வளையதளங்கள் மற்றும் விவாத மேடைகள் தவிர களத்தில் எங்கும் காணமுடியவில்லையே ?! ஏன் ?! #triggerwarning