வதந்தியை உண்மையாகி விடலாமா? அரசியலில் குதிக்க கஸ்தூரி முடிவு!
- IndiaGlitz, [Saturday,November 21 2020]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவரது முன் நடிகை கஸ்தூரி பாஜகவில் சேருவார் என்ற வதந்தி இன்று காலை முதல் எழுந்து வந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து தனது டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவு செய்த நடிகை கஸ்தூரி, தற்போது வதந்தியை உண்மையாக்கி விடலாமா என்று தோன்றுகிறது என கூறியுள்ளார். மேலும் என்னை மதித்து வரவேற்கும் கட்சியில் சேரலாம் என்று முதல் முறையாக யோசிக்கிறேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக நடிகை கஸ்தூரி விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று காலையிலிருந்து போன் அடித்தவண்ணம் உள்ளது, ஓய்ந்தபாடில்லை. நான் பிஜேபியில் அமித்ஷா முன்னிலையில் இணைவதாக ஊரே பேசி கொள்கிறதாம், ப்ரெஸ்ஸிலிருந்து வித விதமாக விவரம் சொல்கிறார்கள். போன் எடுத்து மாளவில்லை. பதில் சொல்லி சொல்லி tired ஆகுது. அதனால் ட்விட்டரில் என் பாணியில் மொத்தமாக ஒரு மறுப்பு வெளியிட்டேன். நான் பிஜேபி யில் சேரவில்லை, இது சம்பந்தமே இல்லாத வதந்தி என்று...
ஏனென்றால் இன்றுவரை நான் அந்த எண்ணத்தில் இல்லவே இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பிஜேபியின் செயல்பாடுகளை விமர்சிக்க தயங்கியதே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும், தவறை விமர்சிக்க தயங்கியதில்லை. அனைத்து கட்சிகளிலும் இருந்து எனக்கு அழைப்பு வந்த வண்ணமே உள்ளது. ஆனால் நான் அவசரப்படவில்லை. எனக்கு அரசியல் என்றால் மக்கள் சேவை, மகளிர் உரிமைக்காக போராடுவது தான். கட்சியில் சேர்ந்து கோடி கோடியாக சுருட்டுவது இல்லை. அதனால் தமிழக அரசியலுக்கு நான் லாயக்கா என்ற சுயபரிசோதனையில் என்னை உட்படுத்தி கொண்டுள்ளேன்.
ஆனால் அந்த மறுப்புக்கு வந்த பின்னூட்டங்களை படித்த பின் குறிப்பாக 'திராவிட பகுத்தறிவு' கட்சியினரின் கொச்சையான தாக்குதல்களை சந்திக்கையில்; எதிராளி ஜெயித்து விடுவானோ என்ற பயத்தால் வரும் வன்மத்தை, வெறுப்பை, எதிர்கொள்ள வேண்டி வரும்போது, பாப்பாத்தி, சாணாத்தி, சங்கீ, ஐட்டம், பொட்டச்சி முதலிய சொற்களை படிக்கும்பொழுது வதந்தியை உண்மையாகி விடலாமா என்று தோன்றுகிறது. இதுவரை எந்த கட்சியின்பாலும் சாயாத நான் என்னை மதித்து வரவேற்கும் ஒரு கட்சியில் சேரலாமா என்று முதன் முறையாக யோசிக்கிறேன். இதற்கு முழு காரணம், முழு பொறுப்பு, பகுத்தறிவு பாசறையின் பாதுகாவலர்கள்தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.