விஜய் கபளீகரம் செய்ய போவது இந்த கட்சியை தான்: கஸ்தூரி கணிப்பு

  • IndiaGlitz, [Sunday,February 04 2024]

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் எந்த கட்சிக்கு வாக்கு சதவீதம் குறையும் என்ற வாக்குவாதம் சமூக வலைதளங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தான் விஜய் கபளீகரம் செய்வார் என்று கணித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் இந்த கட்சி குறித்த பரபரப்பான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள் ஒரு பக்கம் விஜய்க்கு வாழ்த்து கூறிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து தோல்வி அடைந்து அதன் பின்னர் காணாமல் போய் இருப்பதாகவும், விஜய் அதில் எந்த இடத்தில் இருக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகை கஸ்தூரி கூறிய போது விஜய்யின் வெற்றி கழகத்தில் ’க்’ இல்லை என்றாலும் அவர் வெற்றியை சரியாக பதிவு செய்துவிட்டார். ஆனால் சினிமாவில் இருக்கும் எத்தனையோ பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்து ஓட்டு போடுவதில்லை. அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டிருந்தால் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகியிருப்பார், கமல் குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ ஆகியிருப்பார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இங்கே ஒவ்வொருவருக்கும் ஏராளமான பிரச்சனை இருக்கிறது, நமக்காக உண்மையாக உழைக்க ஒருவர் இருக்கிறாரா என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர், அந்த இடத்தில் விஜய் இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ஜோசப் விஜய்க்கு பாஜககாரங்க யாரும் ஓட்டு போட மாட்டார்கள், மைனாரிட்டி ஓட்டு தான் அவருக்கு கிடைக்கும், மைனாரிட்டி ஓட்டுக்களை வைத்துள்ள திமுக காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தான் அவர் கபளீகரம் செய்யப் போகிறார் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.