தமிழர் அல்லாதவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? கஸ்தூரியின் நெத்தியடி கேள்வி
- IndiaGlitz, [Saturday,June 17 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை கஸ்தூரி பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: அரசியலுக்கு திரையுலகினர் வரவேண்டும் என்று நான் கூரை மீதேறி குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் வரும்போது என் உடன் பிறவா திரையுலக சகோதர, சகோதரிகள் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்களும் மனிதர்கள் தானே, அவர்களை மட்டுமே வேறு ஏதோ ஒரு ஜீவராசி போல் பார்க்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.
தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதோர் எந்த ஒரு தொண்டையும் செய்யக்கூடாது என்று பேச ஆரம்பித்தால் தமிழுக்கு அகராதி எழுதிய போர்த்துகீசியர், தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர், வந்தேறிகள் என்று சொல்லப்படும் பல தமிழறிஞர்கள் பாரதியார், தமிழ்த்தாத்தா உவேசா உள்பட பலர் புரிந்த தமிழ்த்தொண்டு என்ன ஆவது? இப்படியே போனால் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தமிழர் தவிர வேறு யாரும் விளையாடு முடியாத நிலை ஏற்படும். எனவே எல்லா விஷயத்திலும் பிரித்து பிரித்து பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' இவ்வாறு நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.