இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிர்பயா தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி
- IndiaGlitz, [Saturday,May 06 2017]
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்து ஒன்றில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர் மைனர் என்பதால் அவரை சிறார் சிறைக்கு தள்ளிய நீதிமன்றம், மற்ற ஐந்து பேர்களுக்கும் மரண தண்டனை விதித்தது.
இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீதி நான்கு பேர்களின் மரண தண்டனையை நேற்று சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு நிர்பயாவின் பெற்றோர் உள்பட அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும். நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை' என்று கூறியுள்ளார்.