இதுவரை மின்கட்டணமே கட்டாதவருக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம்: கரூர் கூலித்தொழிலாளி அதிர்ச்சி
- IndiaGlitz, [Friday,July 03 2020]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்க மின் வாரிய ஊழியர்கள் வரவில்லை. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது. பல வீடுகளில் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பல திரையுலக பிரபலங்கள் சிலரும் இதுகுறித்து தங்களுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கரூரில் உள்ள கூலித்தொழிலாளி வீரப்பன் என்பவருக்கு இரண்டு சின்னஞ்சிறு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் தனித்தனி மீட்டர் இருப்பதாகவும், அவர் இதுவரை 100 யூனிட்டுகளுக்குள் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததால் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த மாதம் மின் கட்டணம் எவ்வளவு என்பதை விசாரிக்க வீரப்பன் மின்வாரிய அலுவலகம் சென்றபோது ஒரு வீட்டிற்கு வழக்கம்போல் மின் கட்டணம் கட்டத் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் மற்றொரு வீட்டிற்கு 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என்று கூறியதோடு அந்த தொகையை பணமாக கட்டுகிறீர்களா? அல்லது செக்காக கட்டுகிறீர்களா? என்று அதிகாரிகள் கேட்டதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார் அந்த கூலித்தொழிலாளி வீரப்பன்
அதன் பின்னர் மின்வாரிய ஊழியர்கள் அவருடைய வீட்டின் மின் கட்டணம் குறித்து சோதனை செய்த போது மின்சார கட்டண தொகையில் புள்ளி வைக்க மறந்ததால் தான் இந்த தவறு நேர்ந்ததாகவும் இதுகுறித்து விசாரணை செய்ததாகவும் தெரிவித்து அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
மின்சாரம் மட்டுமின்றி மின்சார கட்டணமும் பொதுமக்களுக்கு ஷாக் அடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது