தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி: கரு.பழனியப்பன்
- IndiaGlitz, [Saturday,March 17 2018]
தமிழக அரசியலில் வேறு எந்த நபரும் அரசியலுக்கு வருவதாக கூறியபோது வராத எதிர்ப்பு ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியவுடன் வந்துள்ளது. 40 ஆண்டுகால நண்பரான கமல்ஹாசனே அவ்வப்போது ரஜினிக்கு தனது எதிர்ப்பை மறைமுகமாக தெரிவித்து வருகிறார் என்றால் மற்றவர்கள் குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த நிலையில் புதியதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ள இயக்குனர் கரு.பழனியப்பன் தனது முதல் வீடியோவாக தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி என்று அலசி ஆராய்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளவற்றின் சாரம்சம் இதுதான்:
எம்ஜிஆர், அவர் தனது தனித்தன்மையுடன் அரசியலுக்கு வந்தார். ஆனால் ரஜினி ஏன் அவருடைய முகத்தை கழட்டி விட்டு எம்ஜிஆர் முகமூடியை போட்டு கொள்ள வேண்டும். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள்
வெற்றிடத்தை நிரப்புவதாக ஏன் கூறுகின்றீர்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது வெற்றிடம் இல்லை ஆனால் அவர் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி கொண்டார். அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. நீங்கள் வெற்றிடத்தை நிரப்ப வருவது கிரிக்கெட்டில் சப்ஸ்ட்டியூட் மாதிரி. எங்களுக்கு சப்ஸ்ட்டியூட் தேவையில்லை, நிரந்த ஆட்டக்காரன் தான் தேவை
ஆன்மீக அரசியல் என்றால் சாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்று கூறுகிறீர்கள். ஜாதி அரசியல் நடத்தி வரும் ஏசி சண்முகத்தை பக்கத்தில் வைத்து கொண்டு இது எப்படி சாத்தியம்?
எம்ஜிஆர் அண்ணாயிசம் என்ற கொள்கையை பின்பற்றியபோது துக்ளக் பத்திரிகை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதே துக்ளக் பத்திரிகை இப்போது உங்களுடைய ஆன்மீக அரசியலை வரவேற்கின்றது. இதில்தான் எங்களுக்கு சந்தேகம்
எம்ஜிஆர் ஆட்சியிலும் தவறு நடந்துள்ளது. மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என்று தாய் மீது சத்தியம் செய்தவர் பின்னர் மதுக்கடைகளை திறந்தார். இடஒதுக்கீடு விஷயத்தில் முதலில் ஒரு கொள்கையை அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்கினார். இப்படி இருக்கும் போது எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது?
எம்ஜிஆர் இலங்கை மக்களுக்கு பல நன்மைகள் செய்தார். குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு பண உதவி செய்தார். இலங்கை தமிழ் மக்கள் விஷயத்தில் உங்கள் நிலை என்ன
நீங்கள் இதுவரை எளிய மக்களுக்காக குரல் கொடுத்துள்ளீர்களா? ராஜ்குமார் கடத்தலின்போதும், அமிதாப் உடல்நலமில்லாமல் இருந்தபோதும் மட்டும்தான் குரல் கொடுத்தீர்கள், சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு ஆகியவை குறித்து குரல் கொடுத்ததுண்டா?
திருமண மண்டபம் கட்டும்போது பிரச்சனை வந்ததால் எம்ஜிஆரை சந்தித்தேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் சரியான ஆவணங்கள் வைத்திருந்தால் சட்டப்படி கோர்ட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும், கோட்டைக்கு ஏன் சென்றீர்கள். விகடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டபோது எம்ஜிஆரை போய் பார்க்கவில்லை, சட்டப்படி தான் சந்தித்தார்.
தமிழன் வாழ்ந்தால் தமிழ் வளரும் என்று சொல்வதை ஏற்கமுடியாது. இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பலர் பார்சி இனத்தவர்கள் தான் அவர்களுடைய மொழி வளர்ந்ததா?
இருந்தாலும் ஒரு ரசிகனாக உங்களுடைய 'கபாலி' படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் வரக்கூடாது என்று சொல்ல மாட்டேன், தாராளமாக வாருங்கள். ஆனால் யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வது நான் தான்
இவ்வாறு கரு பழனியப்பன் தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார்.