அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ!
- IndiaGlitz, [Monday,August 10 2020]
நடிகரும் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கருணாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கருணாஸ் மருத்துவமனையிலிருந்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கருணாஸ் கூறியிருப்பதாவது.
கொரோனா என்னும் கொடிய தொற்றோடு அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் முன்னேற்றம் பெற்று நலமுடன் இருக்கிறேன். உயிர் காக்கும் மருத்துவர்களின் அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கான அரசு மருத்துவமனையில் இருக்கின்றேன். இங்கு உயர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவம், ஆறுதல் தரும் சொற்கள், ஆரோக்கியமான உணவு, துப்புரவு பணியாளர்களின் தூய்மையான பணி, சுத்தமான காற்று, என நான் இருக்கும் அரசு மருத்துவமனை உள்ளது.
மக்களோடு மக்களாக தொகுதி மேம்பாட்டு பணிகளில் இருந்தபோது கண்ணுக்குத் தெரியாத தொற்று என்னை தொற்றிக் கொண்டது. இப்போது நான் தேறி வருகிறேன். என்னை தேற்றிய மாண்புமிகு முதல்வருக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும், ஊட்டச்சத்தான வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்திய தொகுதி மக்களுக்கும், அனைத்து தமிழ் உறவுகளுக்கும், சட்டமன்ற உறுப்பினராய் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி’ என்று கருணாஸ் கூறியுள்ளார்.
View this post on InstagramA post shared by Karunaas (@sethukarunaas) on Aug 9, 2020 at 10:43pm PDT