தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்
- IndiaGlitz, [Monday,July 24 2017]
தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் திரையுலகினர்களின் பங்கு மிக அதிகம். எம்.எல்.ஏ, எம்பி முதல் முதல்வர் வரை நம் கோலிவுட் நட்சத்திரங்கள் ஜொலித்துள்ளனர். மூன்று ஹிட் கொடுத்துவிட்டால் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக சில நடிகர்களை விமர்சகர்கள் கூறினாலும் உண்மையில் அரசியலில் ஜொலித்த நட்சத்திரங்கள் பலர், பல போராட்டங்களையும் சோதனைகளையும் கடந்தே வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசியலில் ஜொலித்த, சோதனைக்குள்ளான நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
அறிஞர் அண்ணாத்துரை:
அறிஞர் அண்ணா முதலில் தமிழக மக்களுக்கு ஒரு நாடக நடிகராகவும், நாடக கதாசிரியராகவும் தான் அறிமுகமானார். அதன் பின்னர் திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதிய் அண்ணா, தனது நாடகங்களிலும், திரைப்படங்களிலும் புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்ததன் மூலமும், பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதாலும் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல்வராகவும் மக்களுக்கு சேவை செய்தார்.
கலைஞர் கருணாநிதி:
அண்ணாவின் வழியை பின்பற்றிய கலைஞர் கருணாநிதி, திரைப்பட கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் அறிமுகமானார். அவருடைய அனல் பறக்கும் வசனங்கள் ஒவ்வொரு ரசிகனையும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அண்ணாவிற்கு பின் திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற கருணாநிதி இன்று வரை அக்கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்தி வருவதோடு, தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவியில் இருந்துள்ளார்.
எம்.ஜி.ஆர்:
தமிழ் திரையுலகில் புரட்சிகரமான கருத்துக்களையும், பெண்களை கவரும் வகையில் தாய்ப்பாசம், சகோதரி பாசம் ஆகியவற்றை வண்ணத்திரையில் கொட்டியும், அனைத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். திமுக ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்த எம்.ஜி.ஆர் பின்னர் அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 1977ஆம் ஆண்டு முதன்முதலில் பொதுத்தேர்தலை சந்தித்த அதிமுக மாபெரும் வெற்றி பெற்றதால் எம்ஜிஆர் முதல்வரானார். அன்று முதல் அவர் இறக்கும் வரை அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா:
திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வந்த ஜெயலலிதா, எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அதிமுகவில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர், கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து கெளரவப்படுத்தினார். எம்ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் அதிமுக, இரண்டாக உடைந்தாலும், ஒருசில மாதங்களில் அதிமுகவை தனது வசம் ஆக்கிய பெருமை ஜெயலலிதாவையே சேரும். அதிமுகவுக்கு தலைமையேற்று 1991ஆம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். பின்னர் 2001, 2011, 2016 ஆகிய மூன்று பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆரை போலவே மரணம் அடையும் வரை முதல்வராக இருந்தார்.
சிவாஜி கணேசன்:
நடிப்பில் உலக அளவில் பிரபலமாகி, செவாலியே பட்டம் வென்ற சிவாஜியால், அரசியலில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. ஆரம்பகாலத்தில் திமுகவில் தான் சிவாஜி தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் சிவாஜி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்றதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிவாஜிக்கு அக்கட்சி ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது. பின்னர் அக்கட்சியில் இருந்தும் விலகி 1987ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி சேர்ந்து 50 தொகுதிகளில் போட்டியிட்ட சிவாஜி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சிவாஜிகணேசனே திருவையாறு தொகுதியில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தனது அரசியல் பாதையை சுருக்கி கொண்ட சிவாஜி, ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தே விலகினார்.
டி.ராஜேந்தர்:
திரையுலகில் சகலகலாவல்லவராக திகழ்ந்த டி.ராஜேந்தரின் அரசியல் வாழ்க்கை திமுகவில் இருந்தே ஆரம்பமானது. 1989ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். அக்கட்சி பெற்ற மாபெரும் வெற்றிக்கு இவருடைய பங்கும் பெரிய அளவில் இருந்தது என்பதை திமுகவின் முன்னணி தலைவர்களே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். 1996ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இன்றுவரை டி.ராஜேந்தர் அக்கட்சியை நடத்தி வந்த போதிலும் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பாக்யராஜ்:
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற புகழை பெற்றவர் கே.பாக்யராஜ். ஆனால் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திக்காமலேயே கட்சியை மூடிய பெருமை அவர் ஆரம்பித்த 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற கட்சியையே சாரும். துவக்கம் முதலே தன்னை எம்.ஜி.ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், தன்னுடைய கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் புகழப்பட்டவர். எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் சொந்தக்கட்சி தொடங்கி பின்னர் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சில காலமும், திமுகவில் சில காலமும் இருந்தார். தற்போது அரசியலில் இருந்து விலகியுள்ளார் கே.பாக்யராஜ்
விஜயகாந்த்:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்ற அரசியல் தலைவராக விளங்கியவர் விஜயகாந்த். 2005ஆம் ஆண்டு 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற கட்சியை தொடங்கிய விஜய்காந்த், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அனைத்து அரசியல் கட்சிகளையும் அசர வைத்தார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் தொகுதியில் செல்வாக்கு மிகுந்த பாமக வேட்பாளரை தோற்கடித்து முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏவாக நுழைந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார். இருப்பினும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் முறையான கூட்டணி இல்லாததால் விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள நிலையில் விஜயகாந்தின் அரசியல் தலைவிதியை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்
சரத்குமார்:
ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தான் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த சரத்குமார், தான் நடித்த 'நாட்டாமை' படத்தின் பிரதியை ஜெயலலிதாவிடம் படம் பார்க்க கொடுத்தார். ஆனால் அந்த படம் தியேட்டர்களில் அமோகமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஜெஜெ டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய சரத்குமார், பின்னர் 1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார். அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். பின்னர் 2007 ஆம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கினார். பின்னர் 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் 2016ஆம் ஆண்டு அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் திருச்செந்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
எஸ்.வி.சேகர்:
நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுகவின் வேட்பாளராக கடந்த 2006அம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய எஸ்.வி.சேகர் பின்னர் பாஜகவில் சேர்ந்தார். இன்று வரை அவர் அக்கட்சியில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் தவிர இன்னும் கங்கை அமரன், மன்சூர் அலிகான், காயத்ரி ரகுராம், நெப்போலியன், ஆனந்தராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் வெவ்வேறு கட்சியில் நிர்வாகிகளாகவும் பேச்சாளர்களாகவும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..