கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு: நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Saturday,July 28 2018]
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கருணாநிதி அவர்களுக்கு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நள்ளிரவு 1.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றின்மூலம் கூறியுள்ளது.
கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியினை அடுத்து அந்த மருத்துவமனை முன்னர் திமுக பிரமுகர்களும் ஏராளமான தொண்டர்களும் குவிந்துள்ளனர். மருத்துவமனை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.